கறுப்பு காந்தம்; கவர்ந்து இழுக்கும் வசீகரம். அழுத்தமும் உறுதியும் மிக்க நிறம். கறுப்பின் இந்தச் சிறப்புக் குணங்களுடன் இருந்தான் சிறுவன் ரோலிலாலா. அவன் தாய் நோசெகேனி பேனிதான் இந்த அருங்குணங்களின் ஊற்றுக்கண்.
வேரில் ஊற்றும் நீர் கண்ணுக்குத் தெரியாமல் மரத்தில் ஏறி இளநீராக மாறுகிற மாயத்தைப் போல, அவளது அன்பும் பராமரிப்பும் மண்டேலாவின் ரத்தத் திசுக்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி உரமேற்றியது.
பேனி வசித்த கூணு கிராமத்தில், சோஸா இனத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். அமாவெங்கு எனும் வேறொரு இனத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே சொற்பமாக வசித்து வந்தனர். அவர்கள் ஆப்பிரிக்காவின் இன்னொரு பெரிய இனமான சுலு இனத்தவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, விரட்டியடிக்கப்பட்டவர்கள். கூணு கிராமத்தில் வெள்ளையர்கள் குடியேறியபோது, அவர்களிடம் அமாவெங்கு இனத்தவர்கள், வேலைக்காரர்களாகச் சேர்ந்தனர். தொடர்ந்து இவர்கள் கிறிஸ்துவர்களாகவும் மாறிய காரணத்தால், வெள்ளையர்களின் ஆட்சியில் பல அடித்தட்டு வேலைகளுக்குப் பணியமர்த்தப்பட்டனர். இதனால் நடை, உடை, பாவனைகள் அனைத்திலும் வெள்ளையர்களைப் போலவே நடந்துகொண்டனர். இதன் காரணமாக சோஸா இனத்தவர்கள், அமாவெங்கு இனத்தவர்களைக் கண்டாலே அருவருப்புடன் ஒதுங்கி நடந்தனர்.
ஆனால், பேனி வருங்காலத்தின் மாறுபாடுகளை முன்கூட்டியே தெரிந்துகொண்டவளாக அமாவெங்கு இனத்தவரிடம் அன்பு காட்டினாள். தன் மகனும் அவர்களைப் போலவே ஆங்கிலக் கல்வி கற்று, அவர்களைக் காட்டிலும் உயர்ந்த நிலையை எய்த வேண்டும் என விரும்பினாள்.
ஆனால், மண்டேலாவின் தந்தையான காட்லா ஹென்றிக்கோ உடல், பொருள், ஆவி அனைத்தும் சோஸா இனம்தான். மரங்களிலும் கற்களிலுமாகத் தன் மூதாதையர்களை அடையாளம் கண்டு, தெய்வமாக வழிபடுபவர். எனவேதான், மகனுக்குத் தான் வைத்த பெயரான ரோலிலாலாவைப் பள்ளி ஆசிரியை நெல்சன் என மாற்றியபோது, தனது கைகளிலிருந்து தன் மகனை யாரோ பிடுங்கிச் செல்வதைப் போன்ற வலியை உணர்ந்தார். இந்த வலிக்கான நிவாரணியாக அவருக்குள் சட்டென ஒரு எண்ணம் தோன்றியது. அவர் உதடுகள் ஒரு பெயரை உச்சரித்தன. 'மண்டேலா' என தனக்குள் இரண்டொருமுறை சொல்லிப்பார்த்தார். அது அவருடைய பாட்டனாரின் பெயர். அதைத் தன் மகனுக்கு வெள்ளைக்கார ஆசிரியை இட்ட புதிய பெயரான நெல்சனுடன் இணைத்தார். இனி அவன்... நெல்சன் மண்டேலா!
நெல்சனுக்கு அப்போது ஒன்பது வயது. ஒரு நாள், பள்ளி விட்டு வீடு திரும்பிய நெல்சன், வீட்டின் வெளியே சிலர் கூட்டமாக நிற்பதைப் பார்த்தான். ஏதோ விபரீதம் என்று புரிய, கூட்டத்தை விலக்கி வேகமாகக் குடிசைக்குள் நுழைந்தான். வீட்டின் நடுவே கட்டிலில் படுத்திருந்த அவன் அப்பா காட்லா, கடுமையான இருமலால் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தார். அம்மா பேனி அவசரமாகப் பச்சிலை அரைத்துக்கொண்டு இருப்பதையும், கட்டிலின் அருகே அப்பாவின் இளைய மனைவி நோடியாமினி அமர்ந்திருப்பதையும் பார்த்தான். காட்லா இருமியபடியே மகனைப் பார்த்தார். அவரது கண்கள் மகனுக்கு எதையோ சொல்ல விரும்பின. ஆனால், அவரால் எதுவும் பேச இயலவில்லை. இருமல் அதிகரித்தது. புகையிலைக் குழலை எடுத்துப் பற்றவைத்துத் தரும்படி இருமலினூடே இரைந்தார். பேனிக்கு அதைத் தர விருப்பம் இல்லை. இளம் மனைவியான நோடியாமினியும் பயந்து விலகி நிற்க, காட்லா கடும் கோபத்துடன் பார்த்தார். மனைவியர் இருவரும் உடனே புகையிலைக் குழலைப் பற்றவைத்து காட்லாவிடம் நீட்டினர். படுத்தவாக்கிலேயே அதை வாங்கி வாயில் வைத்து, நிதானமாகப் புகையை இழுத்துவிட்டார் காட்லா. அவரது வாயிலிருந்தும் நாசித் துளைகளிலிருந்தும் வெளிப்பட்ட புகை, மெள்ள காற்றில் பிரிபிரியாகப் பிரிந்து பரவ, காட்லாவின் உடல், பூரண அமைதிக்குள் ஆழத் தொடங்கியது. விறைத்த அவரது கை விரல்களிலிருந்து விடுபட்டு, அணையாத நெருப்புடன் தரையில் விழுந்தது புகைக்குழல்.
காட்லா இறந்த சில நாட்களுக்குப் பின்... ஒரு நாள் அதிகாலை, பேனி தன் மகனைச் சீக்கிரமாக எழுப்பினாள்; குளிப்பாட்டினாள். அவனது உடைகளை வாரிச் சுருட்டிக்கொண்டாள். மகனை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டாள். நெல்சனுக்குத் தாங்கள் எங்கே போகிறோம் என ஒன்றுமே தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் நன்றாகப் புரிந்தது... கூணு கிராமத்துக்கும் தனக்குமான வாழ்க்கை முழுமையாக முடிந்துவிட்டது.
இப்போது அவர்கள் இருவரும் தங்களது கிராமத்தைக் கடந்து வெகுதூரம் வந்துவிட்டு இருந்தனர். நெல்சனுக்கு அது மிகவும் புதிய அனுபவம். அடர்ந்த காட்டினூடாகவும் மலைமேடுகளினூடாகவும், அம்மாவைப் பின்தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தான். அவர்களது கால்களின் பின்னால் கிராமங்கள் பல கடந்து சென்றன. மாலை மயங்கியது. பறவைகள் சத்தமிட்டபடி தத்தமது கூடடையத் தொடங்கின வேளையில், தாயும் மகனுமாக மலை உச்சியில் இருந்த அந்தப் பெரும் நிலப்பரப்பை அடைந்தனர்.
அவர்களின் முன், மேற்கத்திய பாணியில் அறுகோண வடிவத்தில் கட்டப்பட்ட அரண்மனை போன்ற இரண்டு கட்டடங்கள், சுற்றிலும் எண்ணற்ற குடிசைகள் புடை சூழ, பிரமாண்டமாக நின்றிருந்தன. விரிந்துகிடந்த தோட்டத்தில், பல அழகிய வண்ண மலர்களுடன், எண்ணற்ற செடி கொடிகளும், பல்வேறு மரங்களும் காட்சியளித்தன. நெல்சன் அதுவரை தன் கற்பனையில்கூட அப்படியரு பிரமாண்டத்தைப் பார்த்ததில்லை.
அரண்மனையின் முற்றத்தில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாகப் பழங்குடி மக்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, கறுப்பு நிற போர்டு கார் ஒன்று, தட்தட்டெனச் சத்தமிட்டபடி அரண்மனையினுள் நுழைந்தது. அடுத்த கணம் பழங்குடியினர், 'ஜோன்ஜின்டேபா வாழ்க! ஜோன்ஜின்டேபா வாழ்க!' என்று கோஷமிட்டபடி, ஓடிச் சென்று சூழ்ந்தனர். அவர்களை நோக்கிக் கையசைத்தபடி, கோட் சூட் அணிந்த, சற்றுக் குட்டையான, கறுத்த மனிதர் ஒருவர் காரினுள்ளிருந்து வெளிப்பட்டார். ஒவ்வொருவருடனும் கைகுலுக்கியபடி, அவர்களது கோரிக்கைகளையும் வேண்டுகோள்களையும் கவனமாகக் கேட்டுக்கொண்டவாறே, மெதுவாக நகர்ந்து வந்த அவரை, நெல்சன் தன் தாயின் கையை இறுக்கப் பிடித்தபடி, ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.
ஜோன்ஜின்டேபா, தெம்பு வம்சத்தின் தற்போதைய பிரதிநிதி. சோஸா இனக் குழு மக்களின் தலைவர். அவர் இந்தப் பதவியில் அமர முக்கியக் காரணமாக இருந்து, கிங்மேக்கராகச் செயல்பட்டவர் நெல்சனின் அப்பாவான காட்லா ஹென்றி.
பேனியின் வாய்மொழி மூலம், தன் நண்பனின் இறப்புச் சேதியைக் கேட்டு, அதிர்ச்சியில் ஒரு நிமிடம் கண்கலங்கி நின்றார் ஜோன்ஜின்டேபா. அவரின் கைகள் நெல்சனின் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தன. ''இனி இவன் என் மகன். இந்த அரண்மனைதான் இனி இவன் வீடு. நீங்கள் இனி கவலைப்பட வேண்டாம்!” என பேனியிடம் உறுதி கூறினார். தன் எண்ணம் ஈடேறியவளாக, பேனி உள்ளம் மகிழ்ந்தாள்.
மறுநாளே, ஜோன்ஜின்டேபாவிடம் விடைபெற்று, தன் கிராமத்துக்குப் புறப்பட்டாள். தன் தாய்க்கு விடை கொடுக்கும்போது, சிறுவன் நெல்சனிடம் கொஞ்சம்கூட வருத்தமே இல்லை. மாறாக, அளவற்ற உற்சாகம்தான் அவன் உள்ளம் பூராவும் நிரம்பியிருந்தது.
''பணம், பொருள், வசதி, அந்தஸ்து என எது குறித்தும் நான் அதற்கு முன் யோசித்ததுகூடக் கிடையாது. ஓர் ஏழைச் சிறுவனுக்கு இது போல் திடீரென ஒரு வசதிமிக்க வாழ்க்கை எதிர்ப்பட்டால், அவன் எத்தகைய மனநிலையில் பிரமிப்பானோ, அதுபோன்றதொரு பிரமிப்பில்தான் நானும் திளைத்திருந்தேன்” என இந்தச் சம்பவம் குறித்து மண்டேலா, பிற்பாடு தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேக்வேணி எனும் அந்த நகரம் ஏற்கெனவே மேற்கத்திய வாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்டிருந்தது. ஆண்கள் கால்சராய் மற்றும் சட்டை அணிந்திருக்க, பெண்கள் குட்டைப் பாவாடை, இறுக்கமான மேல்சட்டை ஆகியவற்றை அணியும் வழக்கத்துக்கு மாறியிருந்தனர். ஒரு காட்டுச் சிறுவனுக்கு அந்த அரண்மனையின் பிரமாண்ட கதவுகள் உள்ளன்போடு விரிந்தன. துவக்கத்திலிருந்த இடைவெளிகள் நாளடைவில் முழுவதுமாக மறைந்து, நெல்சனும் அந்த அரண்மனைக்கு முழுவதுமாகப் பழக்கப்பட்டான். மேலாடையின்றி புழுதிக் காட்டில் திரிந்த காலங்கள் மறைந்தன. இப்போது நெல்சனுக்கு உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள் கிடைத்திருந்தனர். அவர்கள் ஜோன்ஜின்டேபாவின் மூத்த மகன் ஜஸ்டிஸ் மற்றும் மகள் நோமாபூ. நெல்சன் வந்ததிலிருந்தே மூவரது வாழ்க்கையிலும் களிப்பும் உற்சாகமும் களைகட்டத் துவங்கியது.
ஜோன்ஜின்டேபாவின் மனைவி, தன் இன்னொரு மகனாகவே நெல்சனை பாவித்தாள். ஜஸ்டிஸ், நெல்சனைவிட நான்கு வயது மூத்தவன் என்றாலும், நெல்சனின் தோளில் நட்போடு கை போட்டு, அழைத்துச் செல்வான். கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டில் மட்டுமின்றி, ஆட்டம் பாட்டம் என அனைத்திலும் பிரகாசிப்பான் ஜஸ்டிஸ். நெல்சனோ இதற்கு முற்றிலும் தலைகீழ், விளையாட்டு, வேடிக்கைகளில் அதிகம் ஆர்வம் இல்லாத அவனுக்கு, அரண்மனையின் வேறொரு பகுதி மிகவும் ஈர்த்தது. அது ஜோன்ஜின்டேபாவின் அரசு தர்பார்.
சோஸா இனத்தில் ஏற்படும் அனைத்து பஞ்சாயத்துப் போக்குவரத்துகளுக்கும் அங்குதான் தீர்ப்பு வழங்கப்படும். ஊர் தலைக்கட்டுகளும் பெரிசுகளும் அங்கே கூடினாலே, சபை களைகட்டும். பிரச்னைகளைப் பேசித் தீர்த்த நேரம் போக, மற்ற நேரங்களில், வெள்ளை இனத்தவர்களுடன் தங்களது இனத்தவர்கள் வெறும் அம்பு வில்லுடன் நடத்திய வீர தீர சாகசக் கதைகள் ஓடும். அப்போது அனைவரது பேச்சிலும் உணர்ச்சி கொப்பளித்து வழியும்.
அவற்றைக் கேட்டபடி அமர்ந்திருக்கும் நெல்சனுக்கும் தனது மூதாதை யர்கள் பட்ட வேதனைகளின் வரலாறு, கண்களில் நீரை வரவழைக்கும். அதுவரை தனது சோஸா இனத்தைப் பற்றி மட்டுமே உயர்வாக எண்ணி வந்த நெல்சனுக்கு, அவர்களின் பேச்சுக்கள் மூலமாக ஆப்பிரிக்கா என்னும் பரந்த கண்டம், கண் முன் விரியத் துவங்கியது. ஆப்பிரிக்கக் கறுப்பர்கள் வெவ்வேறாகப் பிரிந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் ஒன்று என்பதும், அவர்களின் பொது எதிரி வெள்ளையர்கள்தான் என்பதும், வியாபாரத்துக்காகக் கப்பலில் வந்து இறங்கியவர்கள் பின்னர் தங்களை முழுமையாக அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்கிற வரலாறும் மெள்ள மெள்ளப் புரியத் தொடங்கியது. அந்தக் கணத்தில், நெல்சனுக்குள் விழுந்தது ஒரு தீப்பொறி!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment