Sunday, June 29, 2008

நெல்சன் மண்டேலா-8

அன்று அக்டோபர் 2, 1962. தென் ஆப்பிரிக்காவின் புகழ்மிக்க பிரிட்டோரியா நீதிமன்றம் பரபரப்பாக இருந்தது. இன்னும் சற்று நேரத்தில் போலீஸாரால் அங்கு அழைத்து வரப்படவிருக்கும் தங்களது தன்னிகரற்ற தலைவனைக் காண, பெரும் ஆரவாரத்துடன் நீதிமன்றத்தில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவே தன் இரண்டு சிறு பெண் குழந்தைகளோடு, வின்னி மண்டேலா! சைரன் அலறலுடன் விரைந்து வந்த போலீஸ் வாகனத்தில் இருந்து, யாரும் எதிர்பாராத வகையில் உடலில் புலித்தோலைப் போர்த்தியபடி, தங்களது புராதன உடையில், கூட்டத்தின் நடுவே ஒரு சிங்கம் போல நடந்து வந்தார் மண்டேலா. வெள்ளை நீதிபதிகளும் வக்கீல்களும் அவரது இந்தத் தோற்றத்தைக் கண்டு சற்று மிரளத்தான் செய்தனர். மண்டேலா தனது வலக் கையை உயர்த்தி, கூட்டத்தை நோக்கி 'அமெண்டா' என்று முழக்கமிட, பதிலுக்குக் கூட்டமும் உற்சாகத்துடன் 'அமெண்டா' எனக் கூச்சலிட்டது. 'அமெண்டா' என்றால் உறுதி என்று பொருள்.





அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்றார் என்பதற்காக, மண்டேலாவுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு எழுதியது நீதிமன்றம். இனியும் மண்டேலாவை உயிரோடு வெளியேவிட்டால், அது எதிர்காலத்தில் தனக்குப் பெரும் ஆபத்தாகிவிடும் என்று எண்ணியது தென் ஆப்பிரிக்க அரசு. அதற்குத் தோதாக அடுத்த சில நாட்களில், 'கெரில்ல' ஆயுதப் பயிற்சி வீரர்கள் சிலரை போலீஸார் கைது செய்தனர். அரசுக்கு எதிராகப் போராடிய அந்த வீரர்களுடன் மண்டேலாவுக்கு தொடர்பு இருந்ததாக, அவருக்கு மரணத்தையே தீர்ப்பாக எழுதக் காத்திருந்தது. இதற்கு உலக நாடுகளிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. கிரிக்கெட் அமைப்புகள் தென் ஆப்பிரிக்காவை முழுமையாக ஒதுக்கிவைத்தன. காமன்வெல்த் நாடுகள் தங்களது அமைப்பிலிருந்து தென் ஆப்பிரிக்காவை வெளியேற்றின. மண்டேலாவின் விடுதலைக்காக லண்டன் மக்கள் இரவு முழுவதும் ஜெபம் செய்தனர். அன்றைய ரஷ்யப் பிரதமர் பிரஷ்நேவ், மண்டேலாவை விடுதலை செய்யச் சொல்லிக் கடிதம் எழுதினார். அமெரிக்க வெளி விவகாரத் துறை அமைச்சகம்கூட மண்டேலாவை மன்னிக்கும்படி கடிதம் எழுதியது. இப்படியாக உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மண்டேலாவுக்கு ஆதரவு குவிந் தாலும், தனது கீழ்மையான புத்தியிலிருந்து தென் ஆப்பிரிக்க அரசு ஒரு இம்மிகூடப் பின்வாங்கவே இல்லை.

ஜூன் 12, 1964... தீர்ப்பு நாள்! வழக்கு விசாரிக்கப்பட்ட பிரிட்டோரியா நீதிமன்றத்தில் அனை வரின் முகங்களும் இருண்டிருந்தன. குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார் மண்டேலா. அப்போது அவர் அங்கு நிகழ்த்திய நான்கு மணி நேர நீண்ட நெடிய உரை, உலக நாடுகள் அனைத்தையும் சிலிர்க்கவைத்தது. 'நான் வெள்ளையர்களின் அதிகாரத்தை எதிர்க்கிறேன். அதே போல் கறுப்பர்களின் அதிகாரத்தையும் மறுக்கிறேன். தென் ஆப்பிரிக்கா, ஒரு சுதந்திர பூமி! இங்கு அனைத்து மக்களும் சமமான அதிகாரத்துடன், சகோதரர்களாகக் கைகோத்து வாழ வேண்டும். இதுவே என் கனவு. எனது இந்தக் கனவு முழுமையாக நிறைவேறும்வரை, எனது போராட்டம் தொடரும். இதற்காக என் உயிரையும் இழக்கச் சித்தமாக இருக்கிறேன்' என்று உயரிய மனிதத் தத்துவத்தை வெளிப்படுத்திய அந்த உரைதான், மண்டேலா எனும் சாதாரண தலைவனைப் பிற்பாடு வரலாற்று நாயகனாக மாற்றின.



ஆனால் அன்றோ, அந்த வெள்ளை இன வெறி அரசுக்கு இந்த மகத்தான மனித நேயம் குறித்தெல்லாம் யோசிக்கவும் மனமில்லை. மண்டேலாவுக்கு மரண தண்டனை விதித்தால், எங்கே உலக நாடுகளின் பகைக்கு தான் ஆளாக நேருமோ எனும் பயம் காரணமாக, தனது எண்ணத்தில் சிறு மாற்றம் செய்துகொண்டது. 27 வருட ஆயுள்தண்டனையை மண்டேலாவுக்கும் அவரது சகாக்களுக்கும் விதித்துத் தீர்ப்பு எழுதியது.

கேப் டவுன் கடற்கரையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருந்த ராபன் தீவுச் சிறைக்கு மண்டேலாவும் அவரது சகாக்களும் கொண்டுசெல்லப்பட்டனர். தனது அறையில் இருந்த சின்னஞ் சிறிய ஜன்னல் வழியாகத் தன் மேல் விழும் சூரிய வெளிச்சத்தை ரசித்தார் மண்டேலா. அதே ஜன்னலின் வழியேதான் அவர் தனது மக்களின் காற்றைச் சுவாசித்தார்; பறவைகளின் சத்தத்தைக் கேட்டு மகிழ்ந்தார். அதே போல், தினமும் மாலையில் சூரியனின் அஸ்தமனத்தை ஜன்னலினூடே பார்த்து நெகிழ்ந்தார். ஹேண்டல், சாக்கோஸ்கி போன்ற இசை மேதைகளின் இசைக்கோவையைக் கேட்பதும் தன் ஆரம்ப காலக் கிராமத்து வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுமே, சிறையில் அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகளாக இருந்தன. தொடர்ந்து பால்ஸ்மூர், விக்டர் வெர்ஸ்டர் என வெவ்வேறு சிறைகளுக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். நாட்கள் நகர்ந்தன. ஆனால், அவரது எண்ணத்தின் உறுதி மட்டும் சற்றும் குலையாமல், மேலும், தீவிர நம்பிக்கையுடன் இறுகிக்கிடந்தது. 'சிறை வாழ்க்கை மண்டேலாவின் மனதை எப்படியும் மாற்றியிருக்கும்; போராட்டத்தைக் கைவிடுவதாக அவர் உறுதியளித்தால், அவரை விடுதலை செய்யலாம்' என்கிற நம்பிக்கையுடன் வெள்ளை அதிகாரிகள் பற்களைக் காட்டியபடி ஒருநாள் மண்டேலாவைச் சந்திக்கச் சிறைக்குள் நுழைந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது போல், மண்டேலாவின் மன உறுதி ஒரு நூலிழைகூட இளகியிருக்கவில்லை. 'என் இனத்தின் விடுதலையில்தான் என் விடுதலையும். அதில் எந்த மாற்றமும் இல்லை!' என அவர் அழுத்தமாக இருந்தது அவர்களுக்குப் பிரமிப்பை ஏற்படுத்தியது.

ஒரு நாள், சிறையில் தன்னைக் காண யாரோ வந்திருப்பதாக அழைத்துச் செல்லப்பட்ட மண்டேலா, அங்கே கம்பிகளுக்கு அப்பால் தன் வயதான தாயாரைப் பார்த்ததும் மனம் நெகிழ்ந்தார். சற்றுநேரம் எதுவுமே பேசாமல் மௌனமாக நின்ற அவரின் தாய், தளர்ந்த நடையோடு திரும்பிச் செல்ல, நெடுநேரம் மண்டேலா தாய் போன திசையையே வெறித்தவாறு அங்கேயே நின்றிருந்தார். சில நாட்களுக்குப் பின், சிறை அதிகாரிகள் அவரிடம் நீட்டிய ஒரு குறிப்புத் தாளில், அவரது தாயார் இறந்த செய்தி இருந்தது.

காலங்கள் உருண்டன. மண்டேலாவின் வயதும் சரசரவென ஏறிக்கொண்டு இருந்தது. தோல் சுருங்கியது. மனதைப் போலவே அவரது தலைமுடியும் வெளுப்பாக மாறத் துவங்கியது. மாறாதது, அவரது நிமிர்ந்த நடையும் உள்ளத்து உறுதியும் மட்டும்தான்! அதேசமயம், தன் கணவரை விடுவிக்கவும், ஆப்பிரிக்க தேசிய விடுதலைக்காக மக்களைப் போராட்டங்களில் ஈடுபடச் செய்யவும், கணவரின் இடத்தில் இருந்து சுறுசுறுப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தார் வின்னி மண்டேலா. இதனால் அவர், வெள்ளை இன வெறி அரசால் பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கவேண்டி இருந்தது. 1980ல், தந்தையின் முகமே நினைவில் இல்லாத மண்டேலாவின் மூத்த மகள் ஜின்ஜி, ஷார்ப்வில்லி பல்கலைக்கழகத்தில் எண்ணற்ற வெள்ளை மாணவர்கள் மத்தியில், தன் தந்தையின் விடுதலைக்காகப் பேருரை நிகழ்த்தினார். ''பெரும் ரத்த ஆறு இங்கே ஓடாதிருக்கவேண்டுமானால்... வெள்ளை இன அரசே, என் தந்தையை உடனே விடுதலை செய்!'' என அவர் முழக்கமிட்டு, 'அமெண்டா' எனத் தன் தந்தையைப் போலவே வலக் கையை உயர்த்த, ஒட்டுமொத்த வெள்ளை மாணவர்களும் தங்கள் கைகளை உயர்த்தி 'அமெண்டா' எனக் குரலெழுப்பி, அந்த அரங்கத்தையே அதிரவைத்தனர். 1986ம் ஆண்டு, மண்டேலாவின் விடுதலையை முன்வைத்து பெரும் கலவரம் வெடித்தது. ஒட்டுமொத்தமாகத் தென் ஆப்பிரிக்க அரசே உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டது.

1989ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, புதிய அதிபராக எஃப்.டபிள்யூ.டி. கிளார்க் பதவி ஏற்றார். உடன், காட்சிகள் மாறத் தொடங்கின. 'அபார்தெய்ட்' இன வெறிச் சட்டம் முழுவதுமாக ஒழிக்கப்பட்டது.

1990 பிப்ரவரி 11ம் நாள். இருபத்தி ஏழு வருடங்களாக துருப்பிடித்து இறுகிக்கிடந்த சிறைக் கதவுகள் அகலமாகத் திறந்தன. ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், மற்றும் லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்கள் முன் மண்டேலா சுதந்திரக் காற்றைச் சுவாசித்தபடி வெளியே வந்தார். வலக் கையை உயர்த்தி அவர் 'அமெண்டா' என்று குரலெழுப்ப, அதன் விஸ்வரூப எதிரொலி போல் கூட்டத்தின் கோஷம் விண்ணை முட்டியது.

1991ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மண்டேலா. தொடர்ந்து, தனக்கும் வின்னிக்கும் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக, வின்னிக்கும் தனக்கும் இடையிலான திருமண முறிவு குறித்து, ஏப்ரல் 13, 1992ல் ஜொஹானஸ்பர்க்கில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பில் வெளிப்படையாக அறிவித்தார்.

தனது வாழ்நாளின் நிகரற்ற தியாகத்துக்காக நெல்சன் மண்டேலாவுக்கும் தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் அமைதி தவழச் செய்தமைக்காக அதன் அதிபரான எஃப்.டபிள்யூ.டி. கிளார்க்குக்கும் 1993ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1994ல் தனது 75வது வயதில், தென் ஆப்பிரிக்காவின் முதல் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வரலாற்றைப் பெருமைப்படுத்தினார் மண்டேலா. 1999ல் பதவிக் காலம் முடிந்த பிறகு, மண்டேலா பொது வாழ்விலிருந்து முழுவதுமாக தான் விலகுவதாகக் கூறினாலும், இன்றும் உலகம் முழுக்கப் பரவியிருக்கும் எண்ணற்ற தொண்டு நிறுவனங்களுக்கு கௌரவத் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.

ஒரு சாதாரண கிராமத்துச் சிறுவனாகப் பிறந்து, எதிர்பாராதவிதமாக அரண்மனையில் வாழ நேர்ந்து, கல்வியறிவு பெற்று, ஆப்பிரிக்கக் கறுப்பின தேசியத்துக்காகப் போராடி, தனது சமூகத்தை எதிர்த்த வெள்ளை இன மக்களின் சுதந்திரத்துக்காகவும் பாடுபடும் அளவுக்கு அவர் தம்மைச் செம்மைபடுத்திக்கொண்டவிதம் ஒவ்வொரு தனிமனிதருக்குமான சிறந்ததொரு பாடம்.

பல சமயங்களில் நாயகர்கள் வரலாற்றை உருவாக்குகிறார்கள். அரிதான சமயங்களில் மட்டுமே வரலாறு, நாயகர்களை உருவாக்குகிறது.

அப்படி ஓர் அபூர்வ நாயகர்... நெல்சன் மண்டேலா!

No comments: