Sunday, February 24, 2008

நெல்சன் மண்டேலா-7

தாங்கள் கறுப்பர்களாக இருக்கிறோம் என்பதை
அறிந்துகொள்வதற்காக அவர்கள்
வளர்ந்து ஆளாவதைக் காட்டிலும்
இறப்பது மேல்!

-பென்டன் ஜான்ஸன்

போர்க்களப் பூமியில் ஒவ்வொரு விடியலும் ஒவ்வொரு பாடம்! அலைகடலைச் சிவப்பாக்கி ஆரவாரத்துடன் குளித்தெழும் சூரியனில்தான் எத்தனை சேதிகள்!



விடியலுக்கும் சிவப்புக்குமான இந்தச் சமன்பாட்டை மண்டேலா தெளிவாக உணர்ந்தார். சிவப்பு என்பது நிறமல்ல; சிவப்பு என்பது கட்சியும் அல்ல; அது ஒரு குணம். அடிமைத்தளையைத் தகர்த்தெறியும் போர்க் குணம். அதுதான், அறியாமையின் மடியில் உறங்கிக்கொண்டு இருக்கும் தனது கறுப்பின மக்களுக்கு இன்றைய அடிப்படைத் தேவை என நம்பினார் மண்டேலா. ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸின் பொதுக்கூட்டங்களில் அவரது குரல் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும்விதமாக ஆவேசத்துடன் ஒலித்தது. 'அபார்தெய்ட்' எனும் இன வெறிச் சட்டத்துக்கு எதிராக அவர் எழுப்பிய போர்க் குரலின் விளைவாக 8,000 பேர் அணிதிரண்டனர். இத்தகைய தொடர் போராட்டங்களின் காரணமாக, மண்டேலாவின் புகழ் காட்டுத் தீ போல் ஆப்பிரிக்கர்களின் இதயங்களில் வேகமாகப் பரவப் பரவ, ஆப்பிரிக்க அரசு இந்தப் புதிய தலைவனின் உதயத்தால் பதற்றம் கொள்ளத் தொடங்கியது.



விளைவு, 1952ல் மண்டேலாவுக்கு வந்தது ஓர் அரசாங்க ஓலை. 'நெல்சன் மண்டேலாவாகிய நீங்கள் இனி ஜொஹானஸ்பர்க்கை விட்டு ஒரு அடி நகர்ந்தாலும், கைது செய்யப்படுவீர்கள். பொதுக்கூட்டங்களில் பேசவும் இனி உங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மீறினால் சிறை செல்ல வேண்டி வரும்!' என்று மிரட்டியது அந்த ஓலை.

மண்டேலாவின் அனைத்து நடவடிக்கைகளும் போலீஸாரின் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாயின. உச்சகட்டமாக, 1953ல் தென் ஆப்பிரிக்க அரசு மண்டேலாவை ஆப்பிரிக்கத் தேசிய காங்கிரஸின் பொறுப்புகளிலிருந்து முழுவதுமாக விலக நிர்ப்பந்தித்தது. இத்தகைய தந்திர நெருக்கடிகளின் மூலம் மண்டேலாவை முழுமையாக முடக்கிவிட்டதாக அரசு கற்பனை செய்துகொண்டது. மண்டேலாவும் இதுபோன்ற தருணங்களில் தன்னைப் பாதுகாத்துக்கொள்வது எதிர்காலத்தின் அவசியம் என்பதை உணர்ந்தவராக, கறுப்பு அங்கி அணிந்து சட்டத்தின் மூலமாகக் கறுப்பின மக்களுக்குத் தன்னாலான சேவையைத் தொடர்ந்தார். ஆலிவர் டாம்போ என்னும் சக நண்பருடன் அவர் இணைந்து துவக்கிய அலுவலகத்துக்குத் தினந்தோறும் கறுப்பின மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, அரசாங்கம் தங்களுக்கு இழைக்கும் அநீதியைச் சொல்லிப் புலம்பினர். ஆப்பிரிக்காவில் பல கறுப்பின வழக்கறிஞர்கள் இருந்தாலும், கறுப்பின மக்களுக்காக வாதாடும் ஒரே அலுவலகமாக அந்த இடம் செயல்பட்டது.

ஒரு முறை, ஜன நெரிசல் மிகுந்த பகுதி ஒன்றில், வெள்ளைக்காரப் பெண்மணி ஒருத்தியின் கார் சிக்கித் தவிப்பதைப் பார்த்தார் மண்டேலா. உடனே ஓடிச் சென்று, அவளது காரை பின்னாலிருந்து தள்ளிக் கொடுத்து, நெரிசலிலிருந்து கார் வெளியே வர உதவினார். அந்த வெள்¬ளைக்காரப் பெண்மணி புன்னகையோடு, ''நன்றி ஜான்!” என்றாள். கறுப்பினச் சகோதரர்களின் பெயர் தெரிந்தாலும் வெள்ளை இனத்தவர்கள் பொதுவாக அவர்களை ஜான் என்றே அழைப்பது வழக்கம். இது ஒருவகை நாகரிக அவமானம். தனது உணர்வுகளை வெளிக்காட்டாமல் அந்த வெள்ளைப் பெண்மணியை நோக்கிப் பதிலுக்குப் புன்னகைத்தார் மண்டேலா. தனக்கு உதவி செய்தது, காலத்தின் மிகச் சிறந்த தலைவன் என்பதை அறியாத அந்தப் பெண்மணி காரில் ஏறிக்கொண்டு, உதவிக்கான அன்பளிப்பாக ஆறு பென்ஸ் நாணயமொன்றை நீட்டினாள். மண்டேலா அவளது சிறுமையைக் கண்டு சிலை போல் நிற்க, அதைத் தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாக எடுத்துக்கொண்ட அந்தப் பெண்மணி எரிச்சலும் கோபமுமாக, ''ஓஹோ... உனக்கு ஒரு ஷில்லிங் கேட்கிறதோ!” எனச் சீறிவிட்டு, கையிலிருந்த நாணயத்தைச் சாலையில் விசிறியடித்தவளாக விருட்டென்று காரைக் கிளப்பிக்கொண்டு பறந்தாள். அந்தப் பெண் நடந்துகொண்ட விதம், நெல்சனின் மனதில் நெடுநாட்கள் நெருஞ்சி முள்ளாகத் தைத்துக்கொண்டு இருந்தது.

இக் காலகட்டங்களில் மண்டேலாவின் வாழ்வில் சில முக்கிய மாறுதல்களும் நடந்தன. அவரைத் திருமணம் செய்துகொண்டு சிறுபெண்ணாக வாழ்வைச் சந்தோஷத்துடன் துவக்கிய எவ்லினுக்கு, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பின்பு, கணவனின் அரசியல் நடவடிக்கைகள் மேல் அளவற்ற வெறுப்பு உண்டாக ஆரம்பித்தது. 'என்ன, இந்த மனிதர் கால நேரமே இல்லாமல் எப்போது பார்த்தாலும் அரசியலே கதி என்று இருக்கிறாரே!' எனத் தலையில் கைவைத்துப் புலம்பத் துவங்கினாள். நாளடைவில் அவளின் இந்தப் போக்கு, மண்டேலாவின் மனதிலும் வெறுப்பை ஏற்படுத்தி, விவாகரத்து வரை அழைத்துச் சென்றது. என்றாலும், வெகு சீக்கிரமே அவரை அந்த வேதனையிலிருந்து வெளியே கொண்டுவந்தது, ஓர் அழகிய இள நங்கையின் பார்வை.

'வின்னி மண்டேலா' எனப் பிற்காலத்தில் உலகின் அத்தனை நாளிதழ்களிலும் அச்சாகிய அந்தப் பெண்மணி, இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வமும் துடிப்பும் துணிச்சலும் மிகுந்தவராகத் திகழ்ந்தார். 1958ல் இருவருக்கும் திருமணம் நடந்தது. ''நான் ஒரு போராளியைத் திருமணம் செய்துகொள்கிறேன் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். எனது இந்தப் புதிய வாழ்க்கைப் பாதையில் வலிகளையும் வேதனைகளையும் எதிர்பார்த்தே அடியெடுத்துவைத்திருக்கிறேன்” என்று தன் கணவரின் தோளில் தலை சாய்த்தபடி, நண்பர்களிடம் கூறினார் வின்னி.

அதன் பிறகு மண்டேலாவின் அரசியல் வாழ்வில் புயல் வேக மாறுதல்கள் நடந்தன. போராட்டத்தின் காரணமாக வழக்குகளும் கைதுகளும் தொடர்கதையாகின. உச்சகட்டமாக, 1960ல் ஷார்ப்வில்லி என்னுமிடத்தில் நடைபெற்ற போராட்டத்தில், ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவர்கள் 69 பேர் வெள்ளை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர். 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இதனைக் கண்டித்து மண்டேலா தனது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மூலமாக நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவெடுத்தார். இந்தப் போராட்டம் வெற்றிபெற்றால், எங்கே உலக நாடுகள் மத்தியில் போராளிகளுக்கு மதிப்பு கூடிவிடுமோ என்று பயந்த வெள்ளை அரசு உடனடியாக நெல்சன் மண்டேலா, வால்டர் சிசுலு போன்ற முக்கியத் தலைவர்களைக் கைது செய்ய முடிவெடுத்தது. அதுநாள்வரை அஹிம்சைதான் தங்களது பாதை என நம்பி வந்த மண்டேலாவும் மற்ற தலைவர்களும் ஆயுதம் ஏந்துவதுதான் இனி தங்களுக்கான விடியலைத் தேடித் தரும் என்கிற முடிவுக்குத் தள்ளப்பட்டனர்.

உடனடியாகத் தலைமறைவான மண்டேலா உள்ளிட்ட தலைவர்கள் ஒருங்கிணைந்து 'உம்கோட்டா வே சிஸ்வே' என்னும் புதிய குழு ஒன்றை உருவாக்கினர். டிசம்பர் 1961ல் இந்த அமைப்பு தங்களது முதல் குண்டுவெடிப்பை நிகழ்த்த, வெள்ளை அரசு அதிர்ச்சியில் உறைந்தது. அனைத்து செக் போஸ்ட்டுகளும் உஷார் செய்யப்பட்டன. மண்டேலாவின் உருவம் தாங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, அவரைப் பற்றிய தகவலோ அல்லது உயிருடனோ பிடித்துத் தருபவர்களுக்கு உயர்ந்த சன்மானம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே மண்டேலா தங்களது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட வெளிநாடுகளுக்குப் பயணமாகிவிட்டார்.

சூடான், கானா, எகிப்து, அல்ஜீரியா, லண்டன் மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, உலகத் தலைவர்களைச் சந்தித்து தங்களது மக்கள் படும் துயரங்களை உலகறியச் செய்தார். தென் ஆப்பிரிக்க அரசின் இந்த அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டித்தது ஐ.நா.சபை.

வெற்றிப் புன்னகையுடன் நாடு திரும்பிய மண்டேலாவின் கார் ரகசியமாக ஜொஹானஸ்பர்க் நகரினுள் நுழைந்தது. நண்பர் வால்டர் சிசுலுவுடன் அடுத்த கட்ட போராட்டத்தை எப்படி, எப்போது துவக்கலாம் என விவாதித்தபடி காரில் பயணித்துக்கொண்டு இருந்த மண்டேலாவின் நினைவெல்லாம் கடந்த ஒரு வருடமாகப் பிரிந்திருந்த மனைவி வின்னி மற்றும் அவள் மூலம் பிறந்த பெண் குழந்தைகளான ஜின்ஜி, ஜெனானி ஆகியோரின் மீதே குவிந்திருந்தது.

எதிர்பாராத ஒரு கணத்தில், திடீரென அவர்களது வாகனம் வழிமறிக்கப்பட்டது. ஆயுதம் ஏந்திய ராணுவத்தினர் அவர்களைச் சுற்றி வளைத்தனர். நீண்ட நெடிய சிறைவாசம் தன் மீது கவியப்போவதை அறியாமல், தன் நண்பருடன் காரிலிருந்து இறங்கினார் மண்டேலா!

No comments: