Sunday, February 24, 2008

நெல்சன் மண்டேலா-1

மாறுதல் என்பது சொல் அல்ல,
அது ஒரு செயல்!
அது போர் அல்ல, அமைதி!
குழந்தைகளின் விரல்களைத் தொட்டுக்கொண்டிருக்கும்
விதைகளின் பச்சையமே அது!

-மூஸியாஅபுஜமால்

உலகம் இரண்டாக இருக்கிறது. ஒன்று, கறுப்பு... மற்றொன்று வெள்ளை.

கறுப்பு, தீமையின் நிறமாகவும் வெள்ளை, நன்மையின் நிறமாகவுமென, காலங்காலமாக ஒரு தவறான எண்ணம் உலகம் முழுக்க மனித மனங்களில் புரையோடிக்கிடக்கிறது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், நாடு பிடிக்கும் வெறியில், கப்பல்களில் புறப்பட்ட ஐரோப்பிய வெள்ளை இனத்தவர்களின் திட்டமிட்ட சதியினால் விதைக்கப்பட்ட நஞ்சு இது! மக்களை மனரீதியாகவும் அடிமைப்படுத்த அவர்கள் உருவாக்கிய தந்திரங்கள்தான் எத்தனையெத்தனை!

அவர்கள், கதைகளை உருவாக்கினர். அந்தக் கதைகளின் தேவதைகளுக்கு வெள்ளை ஆடைகளும், சாத்தான்களுக்குக் கறுப்பு ஆடைகளும் அணிவிக்கப்பட்டன. அவர்கள் செஸ், கேரம் என விளையாட்டுக்களைக் கண்டுபிடித்தனர். அந்த விளையாட்டுகளிலும் கறுப்பு மதிப்புக் குறைவான நிறமாகவே தீர்மானிக்கப்பட்டு, நம் மனதினுள் இயல்பாக இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டது. அவர்கள், இறப்பு வீடுகளின் துக்கத்தை வெளிப்படுத்தக் கறுப்பு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தனர். மண வீடுகளுக்கு வெள்ளை நிறத்தை அடையாளப்படுத்தினர். இவ்வாறாக, அவர்கள் உருவாக்கிய புரை இன்னும் நம்மைவிட்டு விலகவில்லை.



ஆனால், அவர்கள் உருவாக்கிய விதிகளில் ஒன்றுமட்டும் இன்று நிறம் மாறிஇருக்கிறது. அது சமாதானத்தின் நிறம். அவர்கள் வெள்ளையாக அதன் நிறத்தை உருவாக்கியிருந்தனர். ஆனால், அதன் நிறம் இன்று கறுப்பு. அவர் பகைவருக்கும் அருளிய நன்நெஞ்சர்... 'நெல்சன் மண்டேலா'!

1990, பிப்ரவரி 11... ஞாயிற்றுக் கிழமை மாலை, நேரம் சரியாக 4.15.

தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற விக்டர் வெர்ஸ்டர் சிறைச்சாலையின் வாசலில், கறுப்பும் வெள்ளையுமாக லட்சக் கணக்கில் மக்கள் கூட்டம். அரை வட்ட வடிவில் பெருந்திரளாக நிற்கும் அவர்களது கண்கள் அனைத்தும் இறுக மூடிக்கிடக்கும் இரும்புக் கதவையே பார்த்துக்கொண்டு இருக்கின்றன. இன்னும் சில நிமிடங்களில் மகத்தான தலைவன் மண்டேலா, அந்த வாசல் வழியாக வெளிவரப் போகிறார்.



அவர்கள் உற்சாகத்துடன் பாடும் விடுதலைப் பாடலும் வாத்தியக் கருவிகளின் இசையுமாக, ஆப்பிரிக்கக் கண்டமே அதிர்வதை உலகம் உன்னிப் பாகக் கவனிக்கிறது. அவர்களின் கரங்களில் கறுப்பு, பச்சை, மஞ்சள் நிறத்திலான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் கொடிகள் படபடக்கின்றன. சர்வதேசச் செய்தி நிறுவனங்கள், ஆயிரக் கணக்கான கேமராக்களுடன் அந்த அற்புத விநாடிக்காகக் காத்திருக்கின்றன. உலக வர லாற்றில் எந்தச் சிறைக்கு முன்பும் இப்படியரு கூட்டம், ஒரு விடுதலையின் பொருட்டுக் கூடியதில்லை!

அதோ, சிறைக் கதவுகளின் க்ரீச்சிடும் சத்தம். கறுப்புச் சூரியன், கதவுகளுக்கு அப்பால் காத்திருக்கிறது. வெளியே லட்சக்கணக்கான கண்கள் இமைக்காமல் காத்திருக்கின்றன. அதோ, கதவு திறக்கிறது! 27 வருடங்களுக்குப் பிறகு, அவரைக் கண்ட வெறியில் கேமராக்கள் பெரும் ஒளி வெள்ளத்துடன் அவரது முகத்தை முற்றுகையிடுகின்றன. ''லாங் லிவ் நெல்சன் மண்டேலா!'' குரல்கள் விண்ணைப் பிளக்கின்றன. கண்களில் நீர் கொட்ட, பரவசத்தில் அவர்களது கைகள் இதயத்தில் கூம்பி நிற்கின்றன.



நானூறு வருட அடிமைச் சங்கிலிகளை அடித்து நொறுக்கிக்கொண்டு, அதோ அவரது பாதம் பூமியை முத்தமிடுகிறது. 72 வயதிலும் உறுதிமிக்க, கம்பீரமான அந்த உயர்ந்த மனிதர் தன் ஒளி சிறக்கும் கண்கள் வழியாக, தன் நிலத்தையும் மக்களையும் நோக்கிப் புன்னகைத்துக் கை உயர்த்தி அசைக்கிறார்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் கோடியில் விரிந்த நிலப்பரப்பு... தென் ஆப்பிரிக்கா. அதன் தலைநகரமான கேப் டவுனில்இருந்து கிழக்கே ஏறக்குறைய 800கி.மீ. தொலைவில் ஒரு மாகாணம். அதன் பெயர், ட்ரான்ஸ்கீய்.

கிழக்கே நீலத் தண்ணீராக விரிந்துகிடக்கும் இந்தியப் பெருங் கடலுக்கும் வடக்கில் உயர்ந்த ட்ராகன்ஸ்பெர்க் மலைத் தொடருக்கும் இடையே காணப்படும் அழகிய நிலப் பரப்பின் பெயர்தான் ட்ரான்ஸ்கீய். ஆயிரக்கணக்கான ஓடைகளும் நதிகளும் அந்தப் பூமிக்கு இடையறாது உயிர்த் தன்மை கொடுத்துக்கொண்டு இருப்பதால், எங்கு திரும்பினாலும் பச்சைப்பசேலெனச் சமவெளிகள். சுருக்கமாகச் சொல்வதானால், அது உருளும் மலைத்தொடரின் மேலமைந்த வசீகர வனப்பரப்பு.

அப்படிப்பட்ட எழில் கொஞ் சும் மாகாணத்தில், சுலு மற்றும் சோஸா என இரண்டு இனக் குழுக்கள் தங்களுக்குள் சண்டையும் சமாதானமுமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பெரும் பான்மையினராக இருந்த சோஸா இனத்தைச் சேர்ந்தவர் காட்லா ஹென்றி. காட்லா, அந்தப் பகுதியில் நாட்டாமை. அவர்களை ஆண்ட 'தெம்பு' அரசர்கள் அவருக்கு அந்தப் பதவியை அளித்திருந்தனர். காட்லாவுக்கு 4 மனைவிகள், 13 குழந்தைகள். மனைவிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந் தால் மட்டுமே, அங்கு குழுத் தலைவர்களுக்கு மரியாதை கிடைக்கும். அது சோஸா இனக் குழுவில் எழுதப்படாத விதி. ஒவ்வொரு மனைவிக்கும் தனித் தனி வீடுகள். வலக்கை மனைவி, இடக்கை மனைவி, பெரிய மனைவி, துணை மனைவி என ஒவ்வொரு மனைவிக்கும் பட்டப் பெயர்கள் வேறு. இதில் காட்லாவின் மூன்றாவது மனைவியும், பட்டப்படி வலக்கை மனைவி யுமானவர் 'நோசெகேனி பேனி'.



'கூணு' என்பது பேனி வசித்த கிராமத்தின் பெயர். அந்தக் கிராமம் முழுவதுமே சோளக்கதிர் வயல்வெளிகளால் ஆனது. அந்தக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் இருந்தன. அனைத்தும் ஒன்றே போல் தோற்றம்கொண்டு இருப்பவை. ஒரு மரம் நடப்பட்டு, சுற்றிலும் வட்டமாக மண் சுவர் எழுப்பப்பட்டு இருக்க... மேலே கூரை, கீழே சாணம் மெழுகிய குளிர்ச்சியான தரை. அந்தக் குடிசைக்குள் நுழைவதற்கு, ஓர் ஆள் குனிந்து செல்லக் கூடிய ஒரே ஒரு வழி. அதுதான் வாசல். இந்த இருண்ட சிறிய வீட்டில், 1918ம் வருடம், ஜூலை 18ல் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு நடந்தேறியது. குடிசைக்கு வெளியே கூடியிருந்த சோஸா இனப் பழங்குடிப் பெண்கள் பேனியின் கதறலையும், உடன் ஒரு சிசுவின் அழுகுரலையும் கேட்டு, அதற்காகவே காத்திருந்தது போலத் தங்களது மூதாதையர்களையும் வனதேவதைகளையும் வாழ்த்தி, பாடல்களைப் பாடத் துவங்கினர். நாட்டாமையின் குழந்தையாதலால், அவர்களிடம் களிப்பும் சந்தோஷமும் அதிகமாகவே இருந்தது. சற்று தொலைவில் இருந்த ஆண்கள் வாத்தியக் கருவிகளை இசைத்து, பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.

குடிசையிலிருந்து, கையில் ஓர் ஆண் சிசுவுடன் ஒரு முதியவள் வெளியே வந்து, குல வழக்கப்படி வானத்துக்கும் பூமிக்கும் குழந்தையைக் காண்பித்துவிட்டு, உள்ளே எடுத்துச் சென்றாள். தொடர்ந்து அந்த வனப் பகுதியில் வாத்தியங்களின் இசை எதிரொலித்துக்கொண்டு இருந்தது. சில நாட்களுக்குப் பின், காட்லா வந்தார். தாதி, மகனைத் தூக்கி வந்து அவரின் கைகளில் கொடுத்தாள். காட்லா பெருமையுடன் தன்னைச் சூழ்ந்திருப்பவர்களை ஒரு முறை பார்த்தபடி, தன் மகனைத் தூக்கி முத்தமிட்டார். 'ரோலிலாலா' என உரக்கக் கூவினார். எல்லோரும் 'ரோலிலாலா... ரோலிலாலா' என அந்தப் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லி மகிழ்ந்தனர்.



இதர சோஸா பெண்களைப் போலவே, குழந்தை ரோலிலாலாவை பேனி இடுப்பில் கட்டப்பட்ட துணியால் எப்போதும் முதுகில் கங்காருவைப் போலச் சுமந்தபடி, வீட்டு வேலைகளையும் வெளி வேலைகளையும் செய்துவந்தாள்.

ரோலிலாலா ஐந்து வயதாகி ஓரளவு பேச ஆரம்பித்ததுமே, தனியாகக் குடிசையைவிட்டு வெளியில் சுற்ற ஆரம்பித்துவிட்டான். நண்பர்களுடன் ஆடு மாடுகளை மேய்க்கச் சென்று, ஆறு குளங்களில் கண்கள் சிவக்க நீச்சலடிப்பதும், உண்டிவில்லால் பறவைகளைக் குறி பார்த்து அடிப்பதும், மரங்களில் ஏறித் தேனை எடுப்பதும், தூண்டில் போட்டு மீன்களைப் பிடிப்பதும், பசுக்களின் மடியிலிருந்து நேரடியாக வாய் வைத்துப் பாலைக் குடிப்பதும் அவனுக்குப் பிடித்தமான விளையாட்டுக்கள். அதே போல, இரண்டு எதிர் எதிர் அணிகளாகப் பிரிந்து குச்சியால் குச்சியைத் தள்ளிச் செல்லும் ஆட்டம் என்றால், சோறு தண்ணி இல்லாமல் மெய்ம்மறந்து ஆட்டத்தில் இறங்கிவிடுவான். பேனி வந்து எத்தனை முறை கூப்பிட்டாலும் போக மாட்டான்.

வீட்டில் காட்லா வரும் சமயங்களில் மட்டும் தலைகீழ்! அவரது மடியில் அமர்ந்தபடி, தங்களது சோஸா மக்களின் பழைய போர்களைப் பற்றியும், அவர்கள் வேட்டையாடும்போது ஏற்பட்ட துணிச்சலான அனுபவங்களையும் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழ்வான்.

ஏழு வயதானபோது, ரோலிலாலாவை அருகில் வெள்ளைக்காரப் பெண்மணி நடத்தி வந்த பள்ளியில் சேர்க்க அழைத்துச் சென்றார் காட்லா. அந்தப் பள்ளியின் சட்டதிட்டங்களின்படி, அங்கு படிக்க வரும் ஆப்பிரிக்கச் சிறுவர்களுக்கு அந்த வெள்ளைப் பெண்மணியே ஓர் ஆங்கிலப் பெயரைச் சூட்டுவாள். அதன் பிறகு அந்தப் பெயர்தான் நிலைத்துவிடும். அதன்படி ரோலிலாலாவுக்கு 'நெல்சன்' என்று பெயர் சூட்டி, ''இனி, அந்தப் பெயரில்தான் அவனை அழைக்கவேண்டும்'' என்றாள் அந்த வெள்ளைக்கார ஆசிரியை.

காட்லாவால் அந்தப் பெயரைச் சரியாக உச்சரிக்க முடியவில்லை. வாய்விட்டுச் சொல்லிப் பார்த்தார். வரவில்லை. காட்லா, மகனைப் பள்ளி யில் விட்டுவிட்டு வீடு திரும்பினார். மகனின் இந்தப் பெயர் மாற்றத்தின் காரணமாக அவருக்குள் எதையோ இழந்த தவிப்பு. அவனைத் தன்னிட மிருந்து யாரோ பிடுங்கிக்கொண்ட தைப் போல ஓர் உணர்வு!

No comments: