Sunday, February 24, 2008

நெல்சன் மண்டேலா-5

நாம் எல்லோரும்
ஒரே தொப்புள் கொடியிலிருந்தே வந்தோம்.
எனினும்,
நம் அசிங்கமான தலைகளை
எங்கிருந்து பெற்றோம் என்று
யாருக்குத் தெரியும்?

-ட்சிக்காயா யூ தாம்சி

அண்ணனின் காதலி தனக்கு மனைவியாவதா?

நெல்சனுக்கு மனம், உடல், வாழ்க்கை அனைத்தும் கசந்துபோனது. ஆனாலும், மன்னரின் கட்டளையை அத்தனை சுலபமாக மறுக்கவும் முடியாது. தவிரவும், தனது இந்த வாழ்க்கையே அவர் போட்ட யாசகம்!



கொடும் கனவினூடே பாதியில் விழித்துக்கொண்ட சிறுவனாக மண்டேலா பெரும் குழப்பத்தில் திகைத்து நிற்க, இந்தச் சிக்கலிலிருந்து மீள தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகச் சொன்னான் ஜஸ்டிஸ். அதன்படி, தெம்பு அரசப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்துகொள்ள ஏழு நாள் பயணமாக மன்னர் காரில் வெளியூருக்குப் பயணமான அன்று இரவு, யாருக்கும் தெரியாமல் ஜஸ்டிசும் மண்டேலாவும் கறுப்பர்களுக்கான பிரத்யேக ரயிலில் ஜொஹானஸ்பர்க் நோக்கிப் போய்க்கொண்டு இருந்தனர். ஒரு சாதாரண கறுப் பின இளைஞனை உலகின் அதி மனிதனாகமாற்றப் போகும் உற்சாகத்தோடு தடதடத்தபடி விரைந்து கொண்டு இருந்தது ரயில்.

ஜொஹானஸ்பர்க்கின் பரபரப்பு நெல்சனை மலைக்கவைத்தது. கறுப்பும் வெள்ளையுமாக எங்கு பார்த்தாலும் மக்கள்... மக்கள்..! சாலைகளில் சீறிச் செல்லும் மோட்டார் கார்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், நடைபாதை வியாபாரிகள், உயர உயரமான கட்டடங்கள், பிரமாண்ட தொழிற்சாலைகள்..! கறுப்பர், வெள்ளையர் தவிர, மூன்றாவதாக ஒரு நிறத்தவரையும் நெல்சன் அங்கே அதிகமாகப் பார்த்தார். அவர்கள் இந்தியர்கள் என்றும், வெகு காலத்துக்கு முன்பே பிரிட்டிஷாரால் கொத்தடிமைகாளாக இங்கு கொண்டுவரப்பட்டு, பின்பு நிரந்தரமாக இங்கே தங்கிவிட்டவர்கள் என்றும் பிற்பாடு நெல்சன் தெரிந்துகொண்டார்.

தேடி வந்தது போலவே நெல்சன், ஜஸ்டிஸ் இருவருக்கும் ஜொஹானஸ்பர்க் தங்கச் சுரங்கத்தில் வேலை கிடைத்தது. ஜஸ்டிசுக்கு எழுத்து வேலை; நெல்சனுக்குக் காவல் பணி! புதிய நகரம், புதிய வாழ்க்கை! எல்லாம் சில நாட்கள்தான். இருவரையும் சல்லடை போட்டுத் தேடி வந்த மன்னர் ஜோன்ஜின்டேபாவுக்கு, இவர்கள் ஜொஹானஸ்பர்க்கில் இருப்பது தெரிய வர, அடுத்த சில மணி நேரத்தில் சுரங்கத்திலிருந்து இருவரும் மூட்டை முடிச்சுகளுடன் வெளியே வந்து விழுந்தனர். ஜஸ்டிஸ் வேறு வழியின்றி ஊர் திரும்ப, நெல்சன் மட்டும் அந்தப் பெரு நகரச் சாலையில் தன்னந்தனியராக நின்றுகொண்டு இருந்தார். எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக அவர் முன் நின்று பயமுறுத்தியது. சட்டென மின்னலாக ஒரு ஞாபகம். பாக்கெட்டைத் துழாவி, கசங்கிய காகிதம் ஒன்றை எடுத்தார். அவரின் தூரத்து உறவினரின் முகவரி அது. உள்ளுக்குள் இனம் புரியாத உற்சாகம் பரவ, அந்த விநாடியிலிருந்து அவர் முன் விரிந்தது அரசியல் பாதை. தான் ஓடுவது ஒரு சிவப்புக் கம்பளத்தின் மேல் எனத் தெரியாதவராக, நெல்சன் அந்த உறவினரின் வீட்டைத் தேடி ஓடினார்.

கார்லிக் பேகேனி... உறவினன் என்று சொல்லிக்கொண்டு வந்தி ருக்கும் அந்தக் கிராமத்து இளை ஞனை மேலும் கீழும் பார்த்தார். 'பார்வைக்கு நல்ல பையனாகத்தான் தெரிகிறான். இவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும்' எனத் தோன்ற, அன்போடு வீட்டுக்குள் அழைத்தார். உணவளித்தார். சில நாட்களுக்குப் பிறகு, ''தயாராக இரு! நாளை உன்னை ஒரு முக்கியமான நபரிடம் அழைத்துச் செல்லப்போகிறேன்'' என்றார். நெல்சனின் அன்றைய இரவு தவிப்புடன் கழிந்தது. அடுத்த நாள் காலையில் உதித்த சூரியனில் நெல்சன் மண்டேலா என எழுதியிருந்திருக்குமோ..! இல்லாவிட்டால், அவரது எதிர்காலத்தைத் தீர்மானித்த 'வால்டர் சிசுலு' என்னும் ஓர் அற்புத வழிகாட்டியை அவர் சந்தித்திருக்க முடியாது.



வால்டர் சிசுலு, ஜொஹானஸ்பர்க்கின் பரபரப்பான மனிதர்; ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் முக்கியப் பொறுப்பில் இருந்தவர். அவரது அறிமுகத்தின் வாயிலாக நெல்சனுக்கு ஒரு யூத நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சமயம் கிடைக்கும்போதெல்லாம் சிசுலுவின் அலுவலகத்துக்குச் செல்வார் நெல்சன். அங்கே சிசுலுவைப் பார்க்க எண்ணற்ற நண்பர்கள் கூடுவர். அரசியல் விவாதங்கள் சூடு பறக்கும். அவை நெல்சனின் மண்டைக்குள் நெருப்பை மூட்டின. அவர்களுடன் தானும் கலந்து தீவிரமான அரசியலில் பங்கேற்க வேண்டுமானால், அதற்குப் படிப்பு அவசியம் என்பதை உணர்ந்த நெல்சன், வேலை செய்துகொண்டே சட்டம் படிக்கத் துவங்கினார்.

காலம் வேடிக்கையானது. துவக்கத்தில் மண்டேலாவை தனது பிரமாண்டத்தால் ஆச்சர்யப்படுத்திய அதே ஜொஹானஸ்பர்க் நகரம், இரண்டே வருடத்தில் அவரை மிகவும் வெறுக்கவைத்தது. காரணம், அங்கு தலைவிரித்தாடும் நிறவெறி. கோட் சூட் அணிந்து ஆங்கிலத்தில் பேசித் திரிந்த தமது கறுப்பினச் சகோதரர்களைப் பார்த்துத் துவக்கத்தில் அகமகிழ்ந்தவர், இப்போது அவர்களைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். காரணம், அந்த டிப்டாப் தோற்றம் வெறும் வெளிப்பூச்சு! உண்மையில், அவர்கள் வெள்ளையர்களின் அலுவலகங்களில் நாய்களை விடக் கேவலமாக நடத்தப்பட்டனர். நிறத்தின் காரணமாக ஒவ்வொரு அலுவலகத்திலும் ஒவ்வொரு நிமிடமும் கறுப்பினத்தவர் அவமானப்படுத்தப்பட்டனர். பேருந்துகளிலும், அங்காடிகளிலும், இதர பொது இடங்களிலும் அவர்கள் வெள்ளையர்களால் தனிமைப்படுத்தப்பட்டனர். வெள்ளை இனத்தவர்கள் வசிக்கும் வீடுகளும் வீதிகளும் அனைத்து வசதிகளுடன் இருந்தன. ஆனால், மண்ணின் மைந்தர்களான ஆப்பிரிக்க மக்களோ, கழிப்பிட வசதிகூட இல்லாதஅசுத் தமான குடியிருப்புகளில் ஒதுக்கப் பட்டனர். இந்த இனப் பாகுபாடு, இயல்பிலேயே தன்மான உணர்ச்சி மிகுந்த நெல்சனுக்குள் பெரும் நிம் மதியின்மையைத் தோற்றுவித்தது. இதனிடையில், வால்டர் சிசுலுவின் அழைப்பின் பேரில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் நெல்சன்.

கட்சியில் சேர்ந்த பின்னர், சில விஷயங்கள் அவருக்குத் தெளிவாகத் தெரிந்தன. அந்தக் கட்சியினரின் நடவடிக்கைகளால் ஆப்பிரிக்கக் கறுப்பினத்தவர்களுக்கு எந்த லாபமும் இல்லை என்பதை வெகு சீக்கிரமே புரிந்துகொண்டார் நெல்சன். மேலும், அந்தக் கட்சியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்க்கும் வெள்ளை இனத்தவர்களே அதிக அளவில் பொறுப்பில் இருந்தனர். அதனாலேயே அவர்களின் நடவடிக்கைகளில் உணர்ச்சி இல்லை. மேலும், குடியேற்ற இந்தியர்களும் அதிக அளவில் அந்தக் கட்சியில் இருந்தனர். 'இந்தியர்களுக்காவது இந்தியா என்றொரு நாடு இருக்கிறது. ஆனால், எமது ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களுக்கென நாடே இல்லை. எனவே, அனைத்துக் கறுப்பினத்தவர்களையும் ஒன்று சேர்த்து, முழுவதும் கறுப்பர்களாலான ஒரு தேசியத்தைக் கட்டியமைக்க வேண்டும்' என்பது நெல்சனுக்குள் ஒரு கனவாக எழுந்தது. இதனை சிசுலுவிடம் பகிர்ந்துகொண்டார். இது போலவே கவுர் ரெடெபே, ஜோ ஸ்லோவா போன்ற ஒருமித்த கருத்துடைய இளைஞர்கள் ஒன்று சேர, 1944ல் ஒரு ஈஸ்டர் தினத்தன்று ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இளைஞர் குழு என்னும் புதிய அமைப்பு, வில்லியம் கோமோ என்பவரின் தலைமையில் உதயமானது. 'ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கர்களுக்கே!' இதுதான் அவர்களது கட்சியின் ஒருமித்த குரலாக ஒலித்தது. தீர்மானக் குழுவில் நெல்சனுக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

ஒரு நாள் மாலை, வழக்கம் போல சிசுலுவின் வீட்டுக்கு அரசியல் நண்பர்களுடன் அனல் பறக்கும் விவாதத்தில் ஈடுபட்டு இருந்த மண்டேலாவுக்கு உள்ளம் துள்ளியது. காரணம், எவ்லின்! அவள் அங்கு தேநீர் உபசரித்துக்கொண்டு இருந்த ஒரு கிராமத்துப் பெண். தாய், தந்தை இல்லாத அநாதைப் பெண் ணான அவள், மருத்துவமனையில் செவிலிப் பெண்ணாக வேலை செய்து வருகிறாள் என சிசுலுவின் மூலம் தெரிந்துகொண்டார் மண்டேலா.

அன்று இரவு, படுக்கையில் படுத்திருந்த மண்டேலாவின் உதடுகள் 'எவ்லின்... எவ்லின்...' எனத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டன.

No comments: