Sunday, February 24, 2008

நெல்சன் மண்டேலா-6

ஒருவர் விடாமல் எல்லோரும் வாருங்கள்
சாத்தானையும் அவனது சீடர் குழாமையும்
விரட்டி விரட்டி நாம் அடித்துத் துரத்தும்
கண்கொள்ளாக் காட்சியைக் காண
ஒருவர் விடாமல் எல்லோரும் வாருங்கள்!

- கூகி வா தியாங்கோ



நெல்சன் மண்டேலா எவ்லின் எனும் இரு இதயங்களின் திருமணம், எளிமைக்கான அழகுடன், 1944ல் நடந்தேறியது. வழக்கமாகத் திருமணங்கள் முடிந்த பின் நடைபெறும் சிறு விருந்துக்குக்கூட வழியில்லாத நிலையில், மண்டேலா நம்பிக்கையுடன் தன் இளம் மனைவியின் கரத்தை இறுகப் பற்றினார். அன்று இரவே, ஜொஹானஸ்பர்க் எனும் பிரமாண்ட நகரத்தின் அழுக்கு போர்த்திய வீதியில், வெளிச்சம் குறைந்த சிறிய வீடொன்றில் இருவரும் இல்லறம் நடத்தக் குடிபுகுந்தனர். நெல்சன் சட்டம் படித்துக்கொண்டு இருக்க, செவிலிப் பெண்ணாகப் பணிபுரிந்த எவ்லினின் சிறு சம்பளத்தில் குடும்பச் சக்கரம் ஓடியது. அடுத்த வருடத்திலேயே, வீட்டில் மழலைச் சத்தம் கேட்டது. மூக்கும் முழியுமாக, அசப்பில் நெல்சனைப் போலவே இருந்த அந்த ஆண் மகவுக்குத் 'தெம்பி' என்று பெயர் சூட்டினர்.



பிறக்கும்போது எல்லா மனிதர்களுமே மிருக இனமாகத்தான் பிறக்கிறார்கள். அனுபவங்கள்தான் அவர்களிடம் இருக்கும் அறியாமைகளைப் படிப்படியாகப் போக்கி, பக்குவமுள்ள மனிதர்களாக மாற்றுகிறது. ஆனால், மகத்தான மனிதர்கள், தாங்கள் மாறியதோடு மட்டுமல்லாமல், ஒரு சமூகத்தையே மாற்றி, தலைமுறைகளுக்கே வழிகாட்டும் பிரமாண்ட விளக்காகப் பிரகாசித்தபடி உயர்ந்து நிற்கிறார்கள். துவக்க காலங்களில் நெல்சனின் மனதையும் ஒரு மாய இருட்டு திரை போட்டு மூடியிருந்தது. தனது சோஸா இனத்தின் மீது மட்டுமே பற்றுக் கொண்டவராக இருந்த நெல்சன், ஜொஹானஸ்பர்க் நகரத்துக்கு வந்த பின், பிற கறுப்பினத்தவர்கள் படும் அல்லல்களைப் பார்த்து உள்ளம் குமுறினார். அதுவரை அவருக்குள் சோஸா இனம் மட்டுமே இருந்தது போய், ஆப்பிரிக்கா எனும் கண்டமும் அதன் மக்களும் அவரது இதயத்தை வியாபித்தனர். இதனாலேயே ஆப்பிரிக்காவில் வசித்த இந்தியர்கள் மீது அவருக்குசின்ன வெறுப்பு உண்டானது.'இந்தியர் களுக்காவது இந்தியா என்றொரு நாடு இருக்கிறது. எமது கறுப்பின மக்கள் சொந்த மண்ணிலேயே சொல்லிக்கொள்ள ஒரு நாடு இல்லாமல் அநாதைகளாகத் திரிகின்றார்களே!' என்று எண்ணிய அவர், 'ஆப்பிரிக்கா, ஆப்பிரிக்கர்களுக்கே!' என முழங்கினார். ஆனால், அவரது இந்த எண்ணம் 1946ம் ஆண்டு அடியோடு மாறியது. அதற்குக் காரணம், இந்தியர்கள் அப்போது நடத்திய காந்திய வழியிலான உரிமைப் போராட்டம்.



தென்னாப்பிரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு அடுத்தபடியாக இந்தியர்களே அதிகம் வசித்து வந்தனர். வெள்ளை அரசு தனது இனவெறியைப் பாரபட்சமில்லாமல் இந்தியர்கள் மீதும் செலுத்தி வந்தது. இதை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய தீவிர போராட்டத்தின் விளைவாக, அவர் இந்தியா சென்ற பின்னரும்கூட, ஆப்பிரிக்காவில் இருந்த இந்தியர்கள் எழுச்சிமிக்க வர்களாக ஒரு வலுவான எதிர்ப்பை வெள்ளை அரசுக்கு எதிராக வெளிப்படுத்தி வந்தனர். இந்தியர்களின் போராட்டத்தில் கட்டுக்கோப்பும் தீவிரமும் இருந்த காரணத்தால், அவர்களை முழு மையாக அடக்கி ஒடுக்க, புதிய சட்டம் ஒன்றை அறிவித்தது வெள்ளை அரசு. அதன்படி, இந்தியர்களின் சுதந்திர நடமாட் டங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. கூட்டங்கள், ஒலிபெருக்கி ஊர் வலங்கள் தடைசெய்யப்பட்டன. இந்தியர்களின் வணிகம் முழுவதுமாக முடக்கப்பட்டது. இந்தியர் களிடம் நிலங்களை விற்பதும் வாங்குவதும் குற்றம் என அறி விக்கப்பட்டது. இந்த அநீதியைக் கண்டித்து இந்தியர்கள் வெகுண் டெழுந்தனர். போராட்டம் வெடித்தது.

மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், வீட்டுப் பெண்கள் என அனைவரும்இந்த இரண்டு வருடப் போராட்டத்தில் முன்னணி வகித்தனர். தடையை மீறி ஊர்வலங்கள் நடத்தப் பட்டன. ஏறக்குறைய 2,000 பேர் சிறைப் பிடிக்கப்பட்டனர். பலரது வேலைகள் பறிபோயின. இஸ் மாயில் மீர், ஜே.என்.சிங் போன்ற மாணவர்களின் ஈடுபாடும்,தியாக மும், அஞ்சாமையும், தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்களிடையே உனர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஒருங்கே தட்டி எழுப்பின. அது வரை இந்தியர்கள் மீது ஒருவித வெறுப்பு உணர்வுகொண்டு இருந்த நெல்சனின் நெஞ்சில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 'இந்தியர்களிடம் இருக்கும் எழுச்சியும் போராட்ட உணர்வும் நம் மக்களிடம் ஏன் இல்லை? அவர்களின் தியாகமும் வீரமும் ஏன் நம் மக்களிடம் இல்லை?' என நெல்சனின் உள்ளத்தில் எண்ணற்ற கேள்வி கள்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி 1913ல் நடத்திய போராட்டங்களைப் பற்றிக் கேள்விப்பட்டார் மண்டேலா. அதுவரை ஒரு தகவலாக மட்டுமே இருந்த மகாத்மாவும் அவரது கொள்கைகளும், மண்டேலாவின் சிந்தனைகளில் பெரும் மாறுதல்க¬ளை ஏற்படுத்தின. இக்கால கட்டங்களில் இந்தியாவில் காந்தி மேற்கொண்ட போராட்டங்களும், அதைத் தொடர்ந்து இந்தியா பெற்ற விடுதலையும் மண்டேலாவின் சிந்தனைகளை வலுப்பெறச் செய்தன. காந்திஜியின் அணுகுமுறைகள் எப்படி இந்திய மக்களை ஒன்றிணைத்து, விடுதலைப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, சுதந்திரத்தைப் பெற்றுத் தந்ததோ, அதே போல ஆப்பிரிக்கக் கறுப்பின மக்களை ஒன்று திரட்டி, எழுச்சியோடு போராட, தன்னலமற்ற தலைமை ஒன்று தேவை என்பதை உணர்ந்தார்.

அதே சமயம், கம்யூனிஸ்ட்டுகளிடம் அவருக்கு இருந்த தேவையற்ற பயமும் மெள்ள விலக ஆரம்பித்தது. ஜே.பி.மார்க்ஸ், டான் டிலோமி போன்ற தோழர்களின் நட்பு காரணமாக கார்ல் மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் படிக்கத் துவங்கினார். கம்யூனிஸ்ட் அறிக்கையும் தாஸ் கேப்பிட்டலும் அவருக்குள் அறிவு வெளிச்சத்தை ஏற்றின. மகத்தான தியாகங்களும் வற்றாத போராட்ட உணர்வும் மட்டுமே ஆப்பிரிக்காவின் அடிமை விலங்கை உடைத்தெறியும் என்னும் அழுத்தமான எண்ணம் அவருக்குள் பதிந்தது. தனது மக்களின் உணர்ச்சி களைத் தட்டி எழுப்பச் சரியான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி அவர் காத்திருந்தார். இந்தத் தருணத்தில்தான், ஒரு கொடிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவுக்கு வெள்ளையர் களால் இறக்குமதி செய்யப்பட்டது. அதன் பெயர் 'அபார்தெய்ட்'. வெள்ளையர்கள் தங்களது இனவெறி இம்சைகளுக்கு சட்டபூர்வமாகச் சூட்டிய புதிய பெயர் அது.

இரண்டாம் உலகப் போரின்போது, ஹிட்லரின் வளர்ச்சி கண்டு பயந்த பிரிட்டிஷ் அரசு, தனது ஏகாதிபத்தியம் நடைபெற்ற குடியேற்ற நாடுகளில் இருந்த மக்களிடம், போரில் தன்னை ஆதரிக்கும்படி குழைந்து வேண்டிக் கேட்டுக்கொண்டு இருந்தது. ஒருவழியாகப் போர் முடிந்து, ஹிட்லரைத் தோற்கடித்து, ஒரு மகத்தான வெற்றியைப் பெற்ற பின்பு, மீண்டும் தன் அதிகாரத்தைத் திணிக்கும் பொருட்டு, அப்போது புதிதாகப் பதவி ஏற்றிருந்த டாக்டர் மாலன் என்பவரின் அரசால் கொண்டுவரப்பட்டதுதான் இந்தக் கொடூர அபார்தெய்ட் சட்டம்.

இதன்படி ஒவ்வொரு ஆப்பிரிக்கனும் இனவாரியாகக் கணக்கெடுக்கப்பட்டனர். கறுப்பினத்தவர்கள், இந்தியர்கள், சீனர்கள், இதர ஐரோப்பியர்கள் எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டனர். கலப்பினத்துக்குப் பிறந்தவர்களாக இருந்தால், அவர்களின் தலைமுடிகளின் சுருள்தன்மை அளவெடுக்கப்பட்டு, அவர்கள் கறுப்பினத்தவரா இல்லையா என்பது தீர்மானிக்கப்பட்டது. இதனால் கலப்புத் திருமணங் கள் மூலமாக ஒரே வீட்டின் ரத்த உறவுகளாக இருக்கும் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை, மகன், மகள் போன்ற உறவுகள்கூட இனவாரியாகப் பிரிக்கப்பட்டனர். குழந்தைகளே ஆனாலும் ஈவிரக்கமின்றி தாயிடமிருந்து பிரிக்கப்பட்டன. வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் காதலிப்பது, திருமணம் செய்துகொள் வது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டன. அதே போல, குறிப்பிட்ட இனத்தவர் வசிக்கும் பகுதிகளில் அந்த இனத்தவர் மட்டுமே கடை நடத்தவோ, தொழில் செய்யவோ அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கெடுபிடிகளால் கிட்டத்தட்ட மூன்றரை மில்லியன் மக்கள் தங்களது வீடு, வாசல், சொத்து, சுகம் என அனைத்தையும் இழந்து, வலுக்கட்டாயமாகக் குடிபெயர்க்கப்பட்டனர். மறுத்தவர்களையும் எதிர்த்தவர்களையும் ராணுவத்தினர் தங்கள் துப்பாக்கியின் பின்புறத்தால் இடித்து, முகவாயைப் பெயர்த்தனர். நூலகங் கள், திரையரங்குகள், பூங்காக்கள் இங்கெல்லாம் வெள்ளையர் அல்லாதவர்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மண்ணின் மக்களான கறுப்பின மக்களே இதனால் பெரிதும் பாதிப்புக்கு ஆளாயினர். பேருந்து, ரயில், கல்விக்கூடங்கள் என அனைத்திலும் கறுப்பினத்தவர்களுக்கென தனி இடம்ஒதுக்கப் பட்டது. அவர்களுக்குப் பிரத்யேக அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு, அதனை எப்போதும் அணிந்திருக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டு, கால்நடைகளைவிட மோசமாக நடத்தப்பட்டனர்.

உலகம் அதுவரை காணாத இந்தப் பெரும் அவலத்தை, ஒன்று சேர்ந்து எதிர்ப்பதென, ஆப்பிரிக்க தேசிய காங்கிரசும், கம்யூனிஸ்ட்டுகளும், தென்னாப்பிரிக்க இந்திய அமைப்புகளும் முடிவு செய்தன.

ஜூன் 26, 1950. அன்று அந்தப் போராட்டத்தை வழிநடத்திச் செல்ல, அனைவருக்கும் பொதுவான ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், நெல்சன் மண்டேலா!

No comments: