Sunday, February 24, 2008

நெல்சன் மண்டேலா-3

மிகமிகத் துயரமான கண்ணீர்
ஒரு கறுப்பு நங்கையின் கண்ணீர்தான்
ஏனெனில், அவளை அழவைப்பது சுலபமல்ல!

-ரே டுரம்

முதன்முதலாக காதல் மூலிகையின் சாறு நெல்சனின் இதயத்தில் சொட்டியபோது, அவருக்கு வயது பதினைந்து. கறுத்த உதட்டுக்கு மேல் ரோமங்கள் எட்டிப் பார்க்கத் துவங்கியிருந்தன. தான் ஒருபெரிய மனிதனாகிவிட்ட தோரணையை உலகுக்கு அறிவிக்கும்விதமாக, நறுவிசான ஆடைகள் அணிந்து, ஒரு கனவானுக்கான தோரணையுடன் வலம் வருவார்.

முந்தைய பகுதிகள்

பகுதி - (02)
பகுதி - (01)







மேக்வேணி நகரில் இருந்த மெதடிஸ்ட் தேவாலயத்தில் ஞாயிறுகளில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும். ஜோன்ஜின்டேபாவின் மூத்த மகன் ஜஸ்டிசுடன் ஒரு ஞாயிற்றுக்கிழமை நெல்சன் அந்தத் தேவாலயத்துக்குப் புறப்பட்டார். ஜஸ்டிஸின் கண் சிமிட்டலில், அங்கு வரும் அழகான பெண்கள் குறித்த தகவலும் இருந்தது. ஆனாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதவராக நெல்சன் தன் வழக்கமான, மிடுக்கான ஆடைகளுடன், அதே சமயம் கிராமத்து மனம்கொண்டவராக தேவாலயத்தினுள் நுழைந்தார். தேவாலயத்தின் அமைதியினூடே, ஒரு பெண் புறா அடிக்கடி குறுக்கும் நெடுக்குமாகச் சடசடத்துப் பறந்தது. அவள் பெயர் விண்ணி. தேவாலய பாதிரியாரின் இளைய மகள். அவளது கண்களின் கறுப்பு, நெல்சனின் வெள்ளை இதயத்தோடு அன்று முதல் சதுரங்கம் ஆடத் துவங்கியது. பிரார்த்தனை முடிந்து தேவாலயத்துக்கு வெளியே வாசலில் கலைந்து போகும் கூட்டத்தினூடே, இருவரது கண்களும் சந்தித்துக்கொண்டன.



நெல்சன், செயல் வீரர். ஒரு பகல் பொழுதில், தேவாலயத்தின் அருகில் இருந்த மர நிழலில், விண்ணியிடம் தன் காதலைத் தெரிவித்து, சம்மதமும் பெற்றுவிட்டார். என்றாலும், நெல்சனுக்குள் ஒரு பதற்றம். காரணம், விண்ணியின் மேற்கத்திய நாகரிகமும், குடும்பத்தினரின் பணக்காரத்தனமும்!

அவர்களும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும், பாதிரியாராக இருந்ததால் உள்ளூர ஒரு வெள்ளைத்தனம் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்தன. நெல்சனோ மனதளவில் இன்னும் கூணு கிராமத்து பழங்குடிச் சிறுவனாகவே இருந்தார்.

விண்ணிக்கு ஒரு அக்கா உண்டு. பெயர் நோமாம்போண்டோ. அவ ளுக்குத் தங்கையின் காதல் பற்றித் தெரிய வர, ''வேண்டாம் விண்ணி! நெல்சன் நமக்குச் சரிவராத கிராமத்தான்'' என வெளிப்படையாகத் தடுத்தாள். ''இல்லை அக்கா! அவர் நாகரிகம் தெரிந்தவர். நம் குடும்பத்துக்கு முற்றிலும் பொருத்தமானவராக இருப்பார்'' என்றாள் விண்ணி. ''அப்படியானால், அவனை நாளை வீட்டுக்கு அழைத்து வா. அவன் எப்படி நடந்துகொள்கிறான் என்பதைப் பொறுத்து முடிவுசெய்வோம்'' எனக் கூறியதோடு, வீட்டிலும் அனைவரிடமும் இந்தத் தகவலைப் பரப்பிவிட்டாள் நோமாம்போண்டோ.

பதினைந்தே வயதான நெல்சன், அன்று காலை வழக்கம்போல தனது தேர்ந்த உடையில் விண்ணியின் வீடு நோக்கிப் புறப்பட்டார். வீட்டை நெருங்க நெருங்க, உள்ளூர அவரது கிராமத்து மனம் நடுங்கத்துவங்கியது. ரெவெரண்ட் மட்யோலோவும் அவரது மனைவியும் மிகுந்த கண்ணியத்தோடு நெல்சனை வரவேற்றார்கள். அவர்களது கண்ணியமான வரவேற்பே நெல்சனுக்குள் இன்னும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அறிமுகப் படலங்களுக்குப் பிறகு, உணவு மேஜைக்கு நெல்சன் அழைக்கப்பட்டார். அங்கு அவருக்கான பரீட்சை காத்திருப்பது தெரியாமல், அவர்களோடு ஒருவராக மேஜை முன் அமர்ந்தார்.

உணவு பறிமாறப்பட்டது. வறுத்த கோழி இறைச்சியை, பாதிரியார் குடும்பத்தினர் முள் கரண்டியாலேயே லாகவமாக வெள்ளையர்களைப் போலச் சிறிது சிறிதாகத் துண்டித்துச் சாப்பிட, அதுவரை அப்படிச் சாப்பிட்டுப் பழக்கமில்லாத நெல்சனுக்கு வியர்த்துக் கொட்டியது. அனைவரின் கண்களும் தன்னை ஓரக்கண்ணால் வேவு பார்ப்பதை அறிந்துகொண்டதாலோ என்னவோ, அவர் கையில் பிடித்திருந்த முள் கரண்டிகளுக்கு நடுவே இறைச்சித் துண்டு சிக்காமல் நழுவி நழுவி விளையாட்டுக் காட்டத் துவங்கியது. தனது எண்ணம் பலித்துவிட்ட சந்தோஷத்தில் நோமாம்போண்டோ வெற்றிப் புன்னகை பூக்க, விண்ணியோ தன் கண் எதிரே காதலன் படும் அவமானங்களைக் காணச் சகியாதவளாகத் தலை திருப்பிக்கொண்டாள். ஒரு கட்டத்தில் அனைவரும் சாப்பிடுவதை நிறுத்தி விட்டு நெல்சனையே வேடிக்கை பார்க்க... சட்டென நெல்சன் இறைச்சித் துண்டைக் கையால் எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.

அதன்பின், இரண்டு நாட்கள் கழித்து விண்ணியைத் தேடி, அவள் வீட்டுக்குச் சென்றார் நெல்சன். விண்ணி வெளியே வர மறுத்து விட்டதோடு, இனி தன்னைப் பார்க்க வர வேண்டாம் எனக் கூறிவிட்டதாக அவளின் அக்கா நோமாம் போண்டோ கூறி, கதவை அடைத்தாள். நெல்சன் கனத்த இதயத்துடன் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்.

நெல்சனுக்குப் பதினாறு வயது. சோஸா இன வழக்கப்படி, ஓர் ஆண் மகனுக்கு 16 வயது ஆகிவிட்டால் அவன் முழுமையான மனிதனாகி விடுகிறான். அந்த வைபவத்தை அங்கீகரிக்கும் வகையில், குல வழக்கப்படி ஒரு சடங்கு நடக்கும். இந்தச் சடங்கைக் கடந்து வரும் ஆண்களுக்கு மட்டுமே சோஸா இனப் பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பர். இஸ்லாமியர்கள் செய்துகொள்ளும் சுன்னத் போலவே இந்தச் சடங்கும் என்றாலும், நான்கு நாட்களுக்கு முன்னதாகவே இன்னும் பலசம்பிரதாயங்கள் துவங்கிவிடும். இந்தச் சம்பிரதாயங்களின்படி, நெல்சனுடன் சோஸா இளைஞர்கள் 26 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக மாபேசே நதிக் கரை அருகே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட குடிசைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர். அனைவரது ஆடைகளும் அகற்றப்பட்டு, அவர்களின் உடல் முழுக்க மந்திர வரிகள் வெள்ளை எழுத்துக்களால் எழுதப்பட்டன. அதன் பிறகு நான்கு நாட்களும் அவர்களின் ராஜாங்கம்தான். அவர்கள் முன் விரிந்து கிடந்த சுதந்திரத்தின் காரணமாக, திருட்டுத்தனமாக வேட்டையாடுவது, அருகில் வசிக்கும் பழங்குடிப் பெண்களிடம் சேர்ந்து ஆட்டம், பாட்டு என இரவுகள் முழுக்க அந்த நதிக் கரையில் உற்சாகமும் கும்மாளமுமாகப் பொழுதைக் கழித்தனர்.

சடங்கின் இறுதி நாளன்று, காலை விடியுமுன்னே கருக்கலில் அனைவரும் ஓடிச் சென்று ஆற்றில் குதித்தனர். பின் தங்களது குடிசை முன் வரிசையாக வந்து நின்றனர். குலப் பெரியவர்கள் மூதாதையர்களை அழைத்தபடி, கைகளில் கத்தியு டன் அவர்கள் முன் வந்து நின்று, மந்திரங்கள் ஓதி, சடங்குகள் செய்தனர். வாத்தியங் கள் பலமாக பின்னணி இசைக்க, வரிசை யில் முதலாவதாக நின்றவன், 'தியின்டோடா' என உரக்க அலறினான். 'தியின்டோடா' என்றால், 'நான் இன்று முதல் பெரிய மனிதனாகிவிட்டேன்' என்று அர்த்தம். நெல்சனின் முறையும் வந்தது. 'தியின்டோடா' என நெல்சனின் குரல் அதிர்ந்தது. சடங்குகள் முடிந்த கையோடு பிரத்யேகமாகக் கட்டப்பட்ட அந்த இரண்டு குடிசைகளையும், அந்த இளைஞர்களின் முன்பாகவே குலப் பெரியவர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். அதோடு அவர்களது விளையாட்டுத்தன மான சிறு வயதுப் பருவம் முடிந்து, வீரமும் தைரியமும் பொறுப்பும் நிறைந்த இளைய பருவம் துவங்குவதாகக் கூற, தான் இப்போது முழுமையான ஆண் மகனாக மாறிவிட்டிருப்பதை உணர்ந்தபடி, தன் முன் எரிந்துகொண்டு இருக்கும் குடிசைகளின் நெருப்பையே கூர்ந்து கவனித்தார் நெல்சன்.

சடங்குகளை நடத்திய பெரியவர் மெலிக்யுலி, அனைவரையும் தன் சைகையால் அமரச்செய்து, உரையாற்றத் துவங்கினார். ''நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். நமது வளமான தேசங்கள் வெள்ளையர்களின் கைகளில் இருக்கின் றன. நம்மைப் பெற்ற தாயை நாம் நமது கோழைத்தனத்தால் பலி கொடுத்துவிட்டு, இன்று அவர்களிடம் அடிமையாக வேலை செய்து உயிர் வாழ்கிறோம். இந்த அவமானத்திலிருந்து நாம் என்று விடுபடப் போகிறோம்?'' என்று அவர் பேசப் பேச, நெல்சனின் மனமும் உடலும் முறுக்கேறத் துவங்கின.

மறுநாள் வீடு திரும்பிய பிறகு, ஜோன்ஜின்டேபா கூறிய ஆப்பிரிக்க வரலாறுகள், நெல்சனைத் தன் எதிர்காலக் கடமைகள் குறித்து ஆழமாகச் சிந்திக்கவைத்தன.

தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன்... ஏப்ரல் 6, 1652.

இதுதான் அந்தக் கறுப்பு நிலத்தில் முதன்முதலாக ஒரு வெள்ளை யன் கால் பதித்து அழுக்கை உண்டாக்கிய நாள். நெதர் லாந்திலிருந்து ஒருடச்சுக் கப்பலில் வந்து இறங்கிய ஜேன் வேன் ரிபீக் மற்றும் அவனு டன் காய்கறி இறைச்சி வியா பாரங்களுக்காக வந்த 90 பேரும் பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் வியாபாரத்தை விஸ்தரித்தனர். இதனால், வில் அம்புகளுக்கும் துப்பாக்கிகளுக்கும் சண்டைகள் நடந்தன. பழங்குடிகள் பெரும்பாலோர் விரட்டி யடிக்கப்பட... எஞ்சியவர்கள் அடிமைகளாகப் பணியமர்த்தப் பட்டனர். 1795ல் பிரிட்டிஷ் படை நுழைந்து, டச்சு வீரர்களை விரட்டி விட்டு, தென் ஆப்பிரிக்கா முழு வதையும் தன்வசமாக்கிக்கொண்டது. இதனை ஆப்பிரிக்காவின் சுலு இன வீரர்கள் பெரும்படை திரட்டி, மீண்டும் எதிர்த்தனர். வழக்கம் போல இந்த முறையும் தோல்வி. அதன் பின், தென் ஆப்பிரிக்கா முழுவதும் பிரிட்டிஷாரின் வசமானது.

அதுவரை, வேளாண்மை நிலமாக இருந்த ஆப்பிரிக்கா இரண்டு முக்கியக் கண்டுபிடிப்புகளின் விளை வாக, தொழில்வளம் மிக்க பூமியாக மாறியது. அத்தனை நாளும் ஆப்பிரிக்கச் சிறுவர்கள் உருட்டி விளையாடி வந்த கற்கள், ஒரு பிரிட்டிஷ்காரனின் பார்வையில் பட, அவன் அந்தக் கற்களை வாங்கிப் பார்த்ததும் மிகுந்த ஆச்சர்யத்துக்கு ஆளானான். அவை வெறும் கற்கள் அல்ல; வைரங்கள்! அப்புறம் கேட்க வேண்டுமா... அந்தப் பகுதிகளில் இருந்த கறுப் பினத்தவர்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டார்கள். அது வெள்ளையர்களின் பண்ணையாக மாறியது. வைரச் சுரங்கங்கள் தோண்டப்பட்டன. தங்களுக்குச் சொந்தமான அந்த நில வளங்களைத் தாங்களே தோண்டி எடுத்துத் தலையில் சுமந்து, வியர்க்க விறுவிறுக்க நடந்து, வெள்ளையர்களிடம் தங்களது உழைப்பையும் பொருட்களையும் கொடுத்து அடிமைகளாகக் கூனிக் குறுகி நடந்தனர் பழங் குடிகள்.

1886ல் ஜொஹா னஸ்பர்க்கில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிக்கப் பட, வெள்ளையர்களின் வளம் கொழிக்கும் நாடாக மாறியது ஆப்பிரிக்கா. இதனால் ஏற்கெனவே அங்கு குடியேறிய டச்சு வம்சாவளி வெள்¬ளையர் களுக்கும் பிரிட்டிஷ் வெள்ளையர் களுக்கும் 1889ல் போர் மூண்டது. போரின் முடிவில் இரு தரப்பினரும் சமாதான உடன்படிக்கைகள் செய்துகொண்டனர். அதன்படி, இரண்டு வெள்ளை இனத்தவர்களும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள, மண்ணின் மைந்தர்களான கறுப்பினத்தவர்கள் ஆட்சி, அதிகாரம், வாக்குரிமை என அனைத்திலிருந்தும் ஓரங்கட்டப்பட்டனர்.

தங்களின் முழுமையான இந்த வரலாற்றைத் தன் வளர்ப்புத் தந்தையான ஜோன்ஜின்டேபாவிடமிருந்து நெல்சன் தெரிந்துகொண்ட அன்று இரவு, அவருக்குத் தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத் தார்.

'தன் மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளுக்கு யார் தீர்ப்பு கொடுக்கப்போகிறார்கள்? இந்தச் சமூகம் என்றைக்கு முழு விடுதலை பெறும்?' என்ற கேள்விகள் அவரைக் குடைந்துகொண்டே இருந்தன.

No comments: