Sunday, February 24, 2008

நெல்சன் மண்டேலா-4

இரவு அழகானது
எம் மக்களின் முகங்களும்
நட்சத்திரங்களும் அழகானவை
எம் மக்களின் கண்களும்
சூரியனும் அழகானவன்
எம் மக்களின் ஆத்மாக்களும்!

- லாங்ஸ்டன் ஹ்யூஸ்

வாலிபத்தில் நெல்சனின் புன்னகை, அவர் படித்துக்கொண்டு இருந்த க்ளார்க் பரி பள்ளியில் பிரசித்தம். மழைக்காலத்தில் இலைகளின் மீது படிந்திருக்கும் நீர் முத்துக்களைப் போல, அவரது கண்கள் தெள்ளியதாகவும் குளிர்ச்சியானதாகவும், அங்கிருந்த சக மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் வசீகரித்தன. அங்குதான் அவரது மனதுக்குள் புதிய புதிய உலகங்கள் விரியத் துவங்கின.

வெள்ளை இனத்தவரைப் பார்த்ததுமே, நாம் அடங்கிப்போக வேண்டும் என்கிற தாழ்வு மனப்பான்மை இயல்பாகவே எல்லா கறுப்பினத்தவருக்குள்ளும் இருப்பது போல, மண்டேலாவுக்கும் இருந்தது. அது, அந்தப் பள்ளியின் கறுப்பின ஆசிரியரான மா(ஹ்)லாசேலாவைப் பார்க்கும் வரைதான்!



வெள்ளைத் தலைமை ஆசிரியருக்குத் தலைவணங்காத அவரது கம்பீரமான நிமிர்ந்த நடையும் தன்னம்பிக்கை மிளிரும் முகமும், மண்டேலாவின் மனதில் ஒருவித சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அதன்பின், ஒவ்வொரு வெள்ளையரைப் பார்க்கும்போதும் மண்டேலாவின் மனதில் ஆசிரியர் மா(ஹ்)லாசேலாவின் முகம் தோன்ற, அடுத்த விநாடியே இவரது உடலிலும் ஒரு திமிர் பிறக்கும். தலை தானாக நிமிரும்.

மனிதருக்கு மனிதர் சமம். நிறங்களால் எவரும் மேன்மையானவரும் இல்லை; அடிமையானவரும் இல்லை. மண்டேலாவின் அடி மனதில் அழுத்தமாகப் பதிந்த இந்த உணர்வே, அது தொடர்பான அடுத்தடுத்த சிந்தனைகளுக்கும் எதிர்கால அரசியலுக்கும் வித்தாக அமைந்தது.

க்ளார்க் பரியில் பி.ஏ., படிப்பு முடிந்ததும், மேல்படிப்புக்காக ஹீல்டு டவுன் கல்லூரி அவரை வரவேற்கக் காத்திருந்தது. ஆண்களும் பெண்களுமாக கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்த அந்தக் கல்லூரிதான் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய கல்லூரி. வழக்கம் போல தனது தனித்த தோற்றத்தாலும் தலைமைப் பண்பு மிக்க நடவடிக்கைகளாலும், ஹீல்டு டவுன் கல்லூரியிலும் கதாநாயகனாகப் பிரகாசித்தார் மண்டேலா.

மூன்றாம் ஆண்டின் இறுதி நாளையட்டி, ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது கல்லூரி. விழாவின் சிறப்பு விருந்தினராக கறுப்பினக் கவிஞர் மெக்காயி வருவதாகக் கேள்விப்பட்டதிலிருந்து, மாணவர்கள் மத்தியில் உணர்ச்சி அலைகள் கொந்தளிக்க ஆரம்பித்தன. விழா நாளன்று, மைதானத்தில் மாணவர்கள் ஆவலோடு பெரும் திரளாகக் கூடியிருந்தனர். சட்டென வாசலில் பரபரப்பு. கல்லூரியின் வெள்ளை இன அதிகாரிகளும், ஆசிரியர்களும் எழுந்து நிற்க, புலித் தோல் அணிந்தபடி மெக்காயி, சிவப்புக் கம்பள விரிப்பில் ஒரு சிங்கத்தைப் போல நடந்து வந்தார். வெள்ளையர்கள் நடத்தும் ஒரு கல்லூரியில், வெள்ளையர்களே மரியாதையாக எழுந்து நிற்க, ஒரு கறுப்பு இனத்தவர் நடந்து வருவதைக்கண்ட மண்டேலாவின் உள்ளம் பெரும் களிப்பில் மிதந்தது.



அரங்கம் அமைதியில் உறைய, அனைவரின் காதுகளும் மெக்காயியின் உரைக்காக ஆவலுடன் காத்திருந்தன.

தன் கையில் பிடித்திருந்த குத்தீட்டியை உயர்த்தியவாறு பேசத் துவங்கினார் மெக்காயி. யாரும் எதிர்பாராதவிதமாக சட்டென அந்தக் குத்தீட்டி, அவரது தலைக்கு மேல் சென்றுகொண்டு இருந்த மின்கம்பியை உரச, தீப்பொறிகள் பறந்தன. அனைவரும் திடுக்கிட்டனர். ஒரு நிமிடம் அதிர்ச்சியுடன் அந்தக் கம்பியையே பார்த்துக்கொண்டு இருந்த மெக்காயி, பின்பு மாணவர்களிடம் திரும்பி, ''தோழர்களே! இதை வெறுமே குத்தீட்டிக்கும் மின் கம்பிக்கும் இடையில் நடந்த மோதலாக நான் கருதவில்லை. ஆன்ம சக்தி நிரம்பிய நம் ஆப்பிரிக்க மரபுக்கும் உயிரோட்டமே இல்லாத மேற்கத்திய நாகரிகத்துக்கும் நடக்கும் இன்றைய கலாசார மோதலாகவே காண்கிறேன். சுருக்கமாகச் சொன்னால், நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராக இதைக் கருதுகிறேன்'' என்று பேசத் துவங்க, மாணவர்களிடையே கைதட்டல்கள் அதிர்ந்தன. அங்கே அமர்ந்திருந்த வெள்ளை இனத்தவர்களின் முகங்களில் அதிர்ச்சி!

மெக்காயி மேலும் ஆவேசத்துடன் தன் கைகளை வானுக்கு உயர்த்தி, கவிதை வாசிக்கத் துவங்கினார். ''உலகப் பேரினங்களே, வாருங்கள்! என் முன் விரிந்துகிடக்கும் அண்ட சராசரங்களை உங்களுக்காகப் பங்கிடுகிறேன். ஐரோப்பாவின் பிரெஞ்சு, ஜெர்மானிய, ஆங்கில தேசங்களே... முதலில் உங்களுக்காக, உங்களின் கர்வத்துக்கும் தற்பெருமைக்கும் இணையாக அந்த பால் வழிமண்டலங்களைப் பரிசாகத் தருகிறேன். எடுத்துச் செல்லுங்கள்! அடுத்ததாக... ஆசிய, அமெரிக்க தேசங்களே! நீங்கள் மீதம் இருக்கும் நட்சத்திரங்களையெல்லாம் எடுத்துச் செல்லுங்கள். கடைசியாக, என் ஆப்பிரிக்க சோஸா கறுப்பின மக்களே! உங்களுக்காக நான் மீதம் வைத்திருப்பதெல்லாம் ஒரே ஒரு நட்சத்திரம்தான்! அது கிழக்கிலே தினமும் முதலில் உதிக்கும் வெள்ளி நட்சத்திரம். எந்தக் காலத்திலும் அது உங்களுக்குள் போராட்ட உணர்வை வற்றாமல் மீண்டும் மீண்டும் ஊற்றெடுக்கவைக்கும்'' என்ற அர்த்தம் பொதிந்த பாடலை, மெக்காயி கைகளை விரித்தபடி அங்குமிங்கும் நடமாடிக்கொண்டே பாடி முடித்ததும், மாணவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் ஆரவாரித்தனர்.



மண்டேலாவின் உள்ளத்தில் அந்தப் பாடல் வரிகள், பெரும் வெடிப்புகளை ஏற்படுத்தின. உண்மையில் அவருக்குத் தானும் சோஸா இனத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமையும் சந்தோஷமும் இருந்தாலும், கேள்விகள் பல எழுந்தன. 'ஆப்பிரிக்காவில் சோஸா இனம் தவிர, பல்வேறு கறுப்பினக் குழுக்கள் இருக்கிறதே... அவர்களும் நம்மைப் போல ஆங்கிலேய ஆதிக்கத்தால் துன்பப்படுகிறார்களே, அவர்களைப் பற்றி யார் கவலைகொள்வது? இனி, நான் வெறுமே சோஸா இனத்துக்கானவன் மட்டுமல்ல; ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் என் தாய் மண். ஆப்பிரிக்காவின் அனைத்து கறுப்பினத்தவனும் என் சகோதரன்' என்று உறுதி பூண்டார்.

க்ளார்க் பரி, ஹீல்டு டவுன் எனப் படிப்படியாக வளர்ந்த அவரது கல்வியும் அரசியல் அறிவும், மேல்படிப்புக்காக வந்த ஹாரே கோட்டைக் கல்லூரியில் தான் பூரணம் அடைந்தது. இங்கு வந்த பிறகுதான் வாழ்க்கையில் முதன்முறையாக சோப்பு, பற்பசை ஆகியவற்றைப் பயன்படுத்தினார் மண்டேலா. அவர் கோட் சூட் அணியத் துவங்கியதும் இங்கு வந்த பிறகுதான். கல்லூரி மாணவர் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மண்டேலா, மாணவர்களுக்கு விடுதியில் வழங்கப் படும் மோசமான உணவை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினார். 'கல்லூரியை விட்டு அனுப்பிவிடுவோம்' என எச்சரித்தது கல்லூரி நிர்வாகம். ''உங்களது மிரட்டல்களால் எனது உணர்வை மழுங்கடிக்க முடியாது. போராட்டத்திலிருந்து ஒருபோதும் நான் பின்வாங்க மாட்டேன்'' என மண்டேலா உறுதியாகக் கூறவே, சொன்னபடியே செய்துவிட்டது நிர்வாகம். எனவே, மண்டேலா பாதியிலேயே படிப்பை முறித்துக்கொண்டு, மேக்வேணிக்குத் திரும்ப நேரிட்டது.

மன்னர் ஜோன்ஜின்டேபாவுக்கு மண்டேலா மீது கடும் அதிருப்தி! ''போய் மன்னிப்புக் கேட்டு, மீண்டும் கல்லூரியில் சேர்கிற வழியைப் பார்!'' என்று அறிவுறுத்தினார். ஆனால், மண்டேலாவின் தன்மான உணர்ச்சி அதற்குப் பிடிவாதமாக மறுத்துவிட்டது. அந்தச் சமயம், மன்னரின் மூத்த மகனான ஜஸ்டிசும் விடுமுறைக்காக அரண்மனைக்குத் திரும்பியிருந்தான். இருவரும் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்த சந்தோஷத்தில், தங்களின் வாழ்க்கைக்குப் புதிய வண்ணங்களைப் பூசிக்கொள்ள விரும்பி, வெளியில் சுற்ற ஆரம்பித்தனர். வயதும் இளமையும் அவர்களை வீட்டில் இருக்கவிடாமல் விரட்டிக்கொண்டே இருந்தது.

இந்தத் தருணத்தில்தான், சோஸா இன கோயில் குருவின் மகள் மேல் மையல் கொண்டான் ஜஸ்டிஸ். நண்பனின் காதலுக்குத் தூது செல்வது மண்டேலாவின் தலையாய பணி. ஜஸ்டிஸின் காதல் தீ குபுகுபுவெனப் பற்றி எரிந்துகொண்டு இருந்த நேரத்தில், மன்னருக்கும் அவரது மனைவிக்கும் இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் எழ, உடனே நம்மூரில் சொல்வது போல 'காலாகாலத்தில் பையனுக்கு ஒரு கால்கட்டு போட்டால்தான் சரிப்படுவான்' என முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளிலும் தீவிரமாக இறங்க ஆரம்பித்தனர்.



ஒரு நாள், ஜஸ்டிஸ், மண்டேலா இருவரையும் அழைத்தார் ஜோன்ஜின்டேபா. ''எனக்கு வயதாகிவிட்டது. நான் கண் மூடுவதற்குள் பேரனோ, பேத்தியோ பார்த்துவிட்டுப் போக வேண்டும்'' என்றெல்லாம் பீடிகை போட்டு, இறுதியாக இருவருக்கும் பெண் பார்த்து முடித்துவிட்டதாகவும், கல்யாணத் தேதி நிச்சயிக்க வேண்டியதுதான் பாக்கி என்றும் சொல்ல, இருவருக்கும் அதிர்ச்சி!

அடுத்து அவர், இவர்களுக்காகப் பார்த்திருக்கும் பெண்களைப் பற்றிச் சொல்ல, அது அதைவிடப் பேரதிர்ச்சி தருவதாக இருந்தது. ஜஸ்டிசுக்குப் பார்த்திருந்த பெண்கூடப் பிரச்னை இல்லை; பணக்கார, தெம்பு வம்சத்துப் பெண். ஆனால், மண்டேலாவுக்கு அவர் பேசி முடித்த பெண் யார் தெரியுமா? தன் நண்பன் ஜஸ்டிசுக்காக, மண்டேலா எந்தப் பெண்ணிடம் தூது சென்றாரோ, அதே பெண்!

No comments: